பெருந்தொகை கைப்பற்றப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் அதிரடியாக கைது!

You are currently viewing பெருந்தொகை கைப்பற்றப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் அதிரடியாக கைது!

கத்தாரை புகழ்ந்து பேசி பெருந்தொகை கைப்பற்றப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் அதிரடியாக கைதாகியுள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை முன்னெடுக்கும் கத்தார் நாட்டுக்காக தொடர்ந்து பரிந்துபேசி வந்த நால்வரில் தற்போது 44 வயதான இவா கைலி கைதாகியுள்ளார்.

முக்கிய கொள்கைகள் தொடர்பில் கத்தாருக்கு ஆதரவாக செயல்பட ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு பெருந்தொகை லஞ்சமாக அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பெல்ஜியம் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வந்தனர்.

தொழிலாளர்கள் தொடர்பில் கத்தாரின் புதிய கொள்கைகளை இவா கைலி வெளிப்படையாக ஆதரித்து வந்துள்ளார். இந்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை இவா கைலி பெல்ஜியம் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கத்தார் தொடர்பான இந்த விவகாரத்தில் சந்தேக வட்டத்தில் உள்ள நால்வரையும் பெயர் குறிப்பிட்டு அடையாளப்படுத்த பெல்ஜியம் அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆனால் கைதான அந்த நால்வரில் இவா கைலியும் ஒருவர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

நால்வர் மீதும் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பொலிசார் முன்னெடுத்த சோதனையில் மொத்தம் 600,000 யூரோ தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கம்ப்யூட்டர், மொபைல் போன்களையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து இவா கைலி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அவருக்கு குற்றவியல் வழக்குகளில் இருந்து விலக்கு இருந்தாலும் முறைகேடு உள்ளிட்ட குறிப்பிட்ட வழக்குகளில் அதற்கு விதிவிலக்கும் உண்டு.

இவா கைலி கைத்தை கத்தையாக பணத்துடன் சிக்கியுள்ளதால், அவர் நீதிபதி முன்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கத்தார் உலகக் கோப்பை தொடர்பில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி மற்றும் அநீதிக்கு எதிராக சர்வதேச அமைப்புகள் குரல் கொடுத்து வந்துள்ளன.

ஆனால், உலகக் கோப்பை தொடக்க நாட்களுக்கு முன்னர் கத்தார் சென்றிருந்த இவா கைலி, அங்குள்ள தொழிலாளர் நலம் பேணுவதில் கத்தார் முன்மாதிரி என வெளிப்படையாக புகழ்ந்தார். கத்தாரின் மொத்தமுள்ள 2.9 மில்லியன் மக்கள் தொகையில், 2.5 மில்லியன் மக்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் என்றே கூறப்படுகிறது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments