போராட்டத்துக்கு கனடா தலைமை தாங்குவதை கொன்சவேட்டிவ் கட்சி உறுதிப்படுத்தும்!

You are currently viewing போராட்டத்துக்கு கனடா தலைமை தாங்குவதை கொன்சவேட்டிவ் கட்சி உறுதிப்படுத்தும்!

உப்பு இடப்படாத முள்ளிவாய்க்கால் கஞ்சி மிகக்கடிமான நெருக்கடிகளிலிருந்து மீளும் தமிழ் மக்களின் தன்னம்பிக்கையையும், மீண்டெழும் தன்மையையும் பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ள கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சி, இலங்கையில் உண்மை, நீதி மற்றும் நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்ட போராட்டத்துக்கு கனடா தலைமை தாங்குவதை தமது கட்சி எப்போதும் உறுதிப்படுத்தும் என உத்தரவாதமளித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் (18) 16 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதனை முன்னிட்டு தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ‘தமிழின அழிப்பு நினைவு நாள்’, ‘முள்ளிவாய்க்கால் நினைவு நாள்’, ‘தமிழினப்படுகொலை நினைவுகூரல்’ எனும் பெயர்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதன்படி கனடாவில் புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வில் கனேடிய கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொலியெவ் சார்பில் அக்கட்சி உறுப்பினர் பார்பரா பால் கலந்துகொண்டார்.

‘தமிழின அழிப்பு நினைவு தின நிகழ்வில் கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொலியெவ் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றியதையிட்டு பெருமிதம் அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘கடந்த தசாப்தத்தில் பதிவான மிகமோசமானதொரு சம்பவத்தை நினைவுறுத்தும் வகையில் இந்நாள் அமைந்துள்ளது’ எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

‘இந்நிகழ்வில் இனப்படுகொலை இடம்பெற்ற காலப்பகுதியில் அம்மக்களுக்கு கிட்டிய ஒரேயொரு உணவான உப்பு இடப்படாத முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தினோம். அது மிகக்கடினமான நெருக்கடிகளிலிருந்து மீளும் தமிழ் மக்களின் தன்னம்பிக்கையையும், மீண்டெழும் தன்மையையும் பிரதிபலிக்கின்றது’ என்றும் பார்பரா பால் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கையில் உண்மை, நீதி மற்றும் நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்ட போராட்டத்துக்கு கனடா தலைமை தாங்குவதை கொன்சவேட்டிவ் கட்சி உறுதிப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply