மட்டக்களப்பு – வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கோபு வாள்வெட்டுக் குழுவினர் வீடு ஒன்றில் உள்நுழைந்து தாக்குதல் நடாத்தி அட்டகாசம் செய்துள்ளனர்.
இச் சம்பவத்தில்பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை மடக்கி பிடித்து கட்டி வைத்ததுடன் தாக்குதலை மேற்கொண்டவர்கள் மோட்டர் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடிய சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (15) இரவு 11.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
மத்திய கிழக்கு நாடு ஒன்றில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒருவர் அந்த பணத்தை வைத்து வவுணதீவு பிரதேசத்தில் கோபு ரீம் வாள்வெட்டு குழு ஒன்றை இயக்கிவருவதுடன் அந்த குழு பணத்தை பெற்று அவர்கள் சொல்லுபவர்களை தாக்குவது போன்ற அடியாட்கள் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை இரவு கொத்தியாவல பிரதேசத்திலுள்ள சது என்பவருடன் முன்விரோதம் காரணமாக அவர் மீது தாக்குதல் நடாத்த கோபு வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 6 பேர் 3 மோட்டர் சைக்கிளில் அவரின் வீட்டை தேடிச் சென்ற நிலையில் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காணியில் மாடுகளை கட்டிக் கொண்டிருந்த போது அவர் மீது தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடி அருகிலுள்ள அவரது மாமனார் வீட்டில் தஞ்சடைந்துள்ளார்.
இந்த நிலையில் வாள்வெட்டு குழுவினர் அங்கு சென்று வீட்டினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதில் சது மற்றும் அவரது மாமியார் படுகாயடைந்ததையடுத்து தாக்குதலை மேற்கொற்கொண்ட சிறைச்சாலை உத்தியோகத்தரை மடக்கி பிடித்து கட்டிவைத்து சிறீலங்கா காவற்துறையினருக்கு அறிவித்தனர்.
இந்த நிலையில் கட்டிவைத்த சிறைச்சாலை உத்தியோகத்தரை வாள் வெட்டு குழுவினர், மீட்டு மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடினர்.
அதனையடுத்து அங்கு சென்ற சிறீலங்கா காவற்துறையினர் 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டு சென்றதுடன் தாக்குதலில் காயமடைந்தவர்களை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.