சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், லடாக் எல்லையில் கூடுதல் படைகளை இந்திய ராணுவம் குவிக்கத் தொடங்கியுள்ளது. ராணுவ வீரர்களும், இந்தோ – திபெத் எல்லைக்காவல் படையினரும் லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
லடாக் எல்லை பகுதியில் அத்துமீறி சீன ராணுவத்தினர் நுழைய முயற்சிப்பதும், அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து நீடித்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பாங்கோங் ஏரி அருகே சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனிடையே எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தின் விமானப்படைத்தளம் விரிவுபடுத்தப்படுவதும், போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படுவதும் செயற்கைக்கோள் படங்கள் மூலமாக தெரியவந்தன.
இதைதொடர்ந்து பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அதேநேரத்தில் கூடுதலாக 5 ஆயிரம் வீரர்களை சீன ராணுவம் குவித்த தகவல்களும் வெளியாகின. இந்த சூழலில் சீன நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங், எத்தகைய போர்சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என அந்நாட்டு வீரர்களுக்கு அறிவுறுத்தினார்.
சமரச முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் பணிகளில் ஈடுபடுத்தப்படாமல் தயார் நிலையில் இருந்த படைகளை, எல்லைப்பகுதிக்கு இந்தியா அனுப்பி வைத்தது. எனினும் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருவதால், கூடுதல் படைகளை அனுப்ப திட்டமிடப்பட்டது. இதையடுத்து ராணுவ வீரர்களும், இந்தோ – திபெத் எல்லைக்காவல் படையினரும் லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, முன்பு டோக்லாம் பகுதியில் மோதல் ஏற்பட்ட போது, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதை சீன அரசின் அதிகாரப்பூர்வ ஏடான க்ளோபல் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. எல்லை விவகாரத்தில் இருநாடுகளும் அமெரிக்காவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் க்ளோபல் டைம்ஸ் ஏடு குறிப்பிட்டுள்ளது.