அசோகச் சக்கரம் மீண்டும் சுழல்கிறது
பாரத தேசத்தின் அகண்ட பாரதம் என்னும் கோட்பாட்டுச் சித்தாந்தத்திற்கு தற்காலிகமான சவாலாக உருவெடுத்துள்ள JVP ஆனது, இடதுசாரிப் போர்வையுடன் சிறிலங்காவில் ஆட்சியதிகாரத்திற்கு வந்துள்ள ஒரு சிங்கள பெளத்த பேரினவாதக் கட்டமைப்பு ஆகும்
இந்தியாவின் பிராந்திய மேலாண்மை சார்ந்த சித்து விளையாட்டுக்களுக்கான ஒரு சூதாட்ட விடுதியாக இலங்கை கருதப்பட்டு பல சதிகளும் இந்தியாவால் கடந்த பல தசாப்தங்களதாக தீட்டப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றமை பலரும் அறிந்த பழகிப்போன விடயம்.
இலங்கையில் நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமக்கு சாதாகமான ஒரு தலைவரை தெரிவு செய்ய முடியும் என இந்தியா கனவு கண்டது. அந்த கணக்கின் படி காய்களையம் நகர்த்தியது.
இந்தியாவின் கணக்குப்படி ஒன்றில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவார், தவறினால் சஜித்பிறேமதாச ஜனாதிபதியாக வரவேண்டும் என கருதி திட்டங்களை லாவகமாக தீட்டி தென்னிலங்கை முகவர்களை வைத்து நகர்த்தியது.
அதே போல வடக்கிலும் தனது முகவர்களை வைத்து வழமையான சதித்திட்டங்களை முன்னகர்த்தியது. அதன் ஒரு அங்கமாகவே பொது வேட்பாளர் என்ற ஒரு நாடகத்தினை வகுத்து நிலாந்தன் போன்ற தனது கைக்கூலிகளை வைத்து அரங்கேற்றியது. இதில் இந்தியாவின் மற்றொரு கைக்கூலியான சுரேஸ் பிரேமச்சந்திரன் நிலாந்தனுடன் இணைந்து செயற்பட்டுவருகிறார்.
எனினும் இந்தியாவின் தப்புக்கணக்கு ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் சாதகமாக நடக்கவில்லை. பதிலாக இந்தியாவின் கனவில் ஜே.வி.பி மண்ணைத்தூவியுள்ளது.
தற்போது ஜே.வி.பி. இலங்கையின் அதிபர் கதிரையை கைப்பற்றியதன் விளைவு சீனா இலங்கையில் குடிகொண்டு விடுமா என்று ஏற்கெனவே இந்தியாவுக்கு இருந்த அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
எனவே பாராளுமன்றத் தேர்தலில் தாம் நினைப்பதை நடைமுறைப்படுத்த துடியாய்து துடிக்கிறது. பாராளுமன்ற அதிகாரத்தை தன்கட்டுப்படாட்டில் கொண்டுவருவதன் ஊடாக, JVPயின் அனுரவை கவிழ்க்க அல்லது தன்காலடியில் விழ வைக்க இந்தியா காய்களை நகர்த்தி வருகிறது.
சஜித்பிறேமதாச, ரணில் விக்கிரம சிங்க, மகிந்த ஆகியோர் தரப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னுள் வாங்கி பெரும்பான்மை ஆசனங்கள் தன்கையில் இருப்பது போன்றதொரு நிலையினை உருவாக்க முயற்சிக்கிறது.
இதற்குப் பக்கபலமாக வடகிழக்கு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்தவமும் இந்தியாவால் கட்டுப்படுத்தக் கூடிய நிலைக்கு வரவேண்டும்.
தமிழ்த் தேசியம் கொள்கை என்ற விடயங்களை தூக்கியெறிந்து விட்டு அதிகளவு பாராளுமன்ற ஆசனங்களை தமிழர் தரப்பு எடுத்து அதனை அனுரவுக்கு எதிரான துருப்புச்சீட்டாக பயன்படுத்த இந்தியா திட்டம் தீட்டிவருகிறது. இதற்காகவே புதுமுகங்கள் தேவை பொதுக்கட்டமைப்பு தேவை என்ற நாடகம் அரங்கேற்றப்படுகிறது.
பொதுக்கட்டமைப்பினை உருவாக்குவதற்குரிய முக்கிய சூத்திரதாரயாக இந்தியாவின் கைக்கூலியாக செயற்பட்டுவரும் பலர் களம் இறக்கப்பட்டுள்ளார்கள். இதில் முக்கிய பங்கு வகிப்பவர் பத்திரிகையாளர் நிலாந்தன். இவர் போர் முடிந்த பின்னர் இந்திய கைக்கூலியாகி தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றி பத்திரிகைகளில் தவறான வியூகத்தில் கடுமையாக விமர்சித்து பல கட்டுரைகளை எழுதி பணம் சம்பாதித்தவர். அண்மைக்காலமாக தமிழ்த் தேசியத்தினை சிதைக்க பசுத்தோல் போர்த்த நரியாக தீவிரமாக எழுதியும் பேசியும் வருகிறார்.
கடந்த காலங்களில் தமிழர் தரப்பை பிரித்து பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டபிராந்தியவல்லரசு இப்போது ஒற்றுமை, தமிழரின் தேசியத் திரட்சி என்றெல்லாம் கதைபேசி நீலிக்கண்ணீர் வடிக்கிறது. புலம்பெயர் தேசத்திலுள்ள தேசியக் கட்டமைப்புகளை நோக்கியும் பிராந்திய அரசு ஒற்றுமைப் புராணம் பாடத் தொடங்கிவிட்டது.2009 மே 18 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மெளனித்தனர். அதன்பின்னர் விடுதலைப்புலிகளால் எத்தகைய இராணுவ முனைப்புகளும் செய்யப்படவில்லை. ஆனால் சிறிலங்கா அரசினால் திட்டமிட்ட தமிழின அழிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்குலகம் இந்த சமனற்ற நிலைமையை அவதானித்து சிறிலங்கா அரசின் மீது கடும், பொருளாதார, அரசியல், மனிதவுரிமை சார்ந்த நெருக்குவாரங்களை பிரயோகித்து வருகிறது. இந்த நெருக்கடிநிலையிலிருந்து மீள்வதற்காக சிநிலங்கா பலவிதமான நகர்வுகளை மேற்கொண்டுவருகிறது. அதிலொன்று தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள்வருகை இதனூடாக போர்க்குற்ற விசாரணை, இன அழிப்பு பொறுப்புக்கூறல் பொருளாதார தடைகள் போன்ற மேற்குலகின் அழுத்தங்களிலிருந்து தப்பிப்பிழைத்து நாட்டைக்கட்டியெழுப்பவே சிறிலங்கா திட்டமிட்டு நகர்கிறது. இதற்காக தனது சொந்த மக்களைக் காவு கொடுக்கவும் சிறிலங்கா பேரினவாதம் தயங்காது. அந்தவகையில் ஈஸ்டர் தாக்குதல் போல ஒரு பெரும் தாக்குதல் சிறிலங்காவில் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் கூட உள்ளதாக புலனாய்வுச் செய்திகள் கூறுகின்றன. இவ்வாறானதொரு சம்பவத்தை தாங்களே செய்துவிட்டு புலிகள் தலையில் கட்டி விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் பெற்றுவிட்டார்கள் என உலகிற்கு காட்டி பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் போன்ற மேற்குலகின் அழுத்தங்களிலிருந்து தப்பலாம் எனவும் கணக்கிடுகிறது.
ஆயுதங்களை எப்போது தூக்க வேண்டும் எப்போது கீழே வைக்கவேண்டும் என தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருந்தார். பிரபாகரன் சிந்தனையின் வழி வரைபடத்தின்படி தமிழின அழிப்பை ஆதாரப்படுத்தி, சுயநிர்ணய உரிமையை ஆயுதமாகப் பயன்படுத்தி மாவீரர்களின் தியாகம், கனவோடு தமிழீழம் நோக்கி நகர்வதுதற்கான காலம்தான் இதுவாகும்.
விடுதலைப்புலிகளின் பெயரால் இராணுவ முனைப்புகள் ஏதாவது நடைபெற்றால் அது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வழி வரைபடத்திற்கும் தேசியத் தலைவரின் சிந்தனைக்கும் முரணானதாகும்.
-அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி