உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக வியப்பில் ஆழ்த்தும் வகையில் புதிய ஆயுத சோதனையை முன்னெடுத்துள்ளது ரஷ்யா. இந்த புதிய ஆயுதத்தை எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது என்று புதின் சவால் விடுத்து உள்ளார்.
உலகில் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய முதல் நாடு என்ற பெருமையை கைவசப்படுத்தியதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் ராணுவ உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பின்னர் முக்கிய ஊடகங்களிடம் தகவல் வெளியிட்ட ரஷ்ய அதிபர் புதின், உலகில் எந்த நாடும் இந்த ஏவுகணையை தடுத்து நிறுத்தவோ முறியடிக்கவோ முடியாது என தெரிவித்துள்ளார்.
ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் நாங்கள் “தனித்துவமான” முன்னேற்றம் கண்டு உள்ளோம். எங்களைப் பிடிக்க மற்ற நாடுகள் முயற்சிக்கின்றன” என்று புதின் கூறினார்.
உலக வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்காவை விட ஒருபடி மேலே சென்று புதிய ஆயுதம் ஒன்றை ரஷ்யா கைவசப்படுத்தியுள்ளது. மேலும், இந்த ஏவுகணையை உலகின் எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது எனவும், வானில் இருந்து வெளியேறிய எரிகல் போன்று இது இலக்கை தாக்கி அழிக்கும் எனவும் புதின் தெரிவித்துள்ளார். ஷிர்கோன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையானது மாக் 9-ன் வேகத்தை மிஞ்சும் எனவும் மணிக்கு சுமார் 7,000 மைல்களை தாண்டும் எனவும் புதின் அறிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவங்கார்டு ஹைப்பர்சோனிக் மற்றும் கின்ஷ்கால் ஹைப்பர்சோனிக் ஏவுகணை குறித்து புதின் முதன் முறையாக பேசி இருந்தார். அவங்கார்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணையானது ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் பாயும் எனவும் புதின் கூறினார். அதுமட்டுமின்றி, இலக்கை நெருங்க நெருங்க ஆயுதத்தின் போக்கு மற்றும் அதன் உயரத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைப் போலவே, அமெரிக்காவும் சீனாவும் ஹைப்பர்சோனிக் திட்டங்களில் ஈடுபட்டு உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனா ஒரு ஹைப்பர்சோனிக் விமானத்தை பரிசோதித்ததாகக் கூறியது, அதே நேரத்தில் அமெரிக்க விமானப்படை ஒரு ஏவுகணையை உருவாக்க லாக்ஹீட் மார்டினுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.