அணுவாயுத பாவனைக்கு ஆயத்தமா…?

You are currently viewing அணுவாயுத பாவனைக்கு ஆயத்தமா…?

நடைபெறும் உக்ரைன் மீதான தாக்குதலின் நீட்சியாக அணுவாயுதங்களை ரஷ்யா பாவனைக்கு எடுக்குமாவென்ற அதிர்ச்சி கலந்த கேள்வி உலகெங்கும் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

உக்ரைனுக்கு ஆதரவாக முழு ஐரோப்பாவும் மாறியுள்ள நிலையில், ரஷ்யாவின் அணுவாயுதப்பிரிவின் தலைவர்களுக்கு விசேட உத்தரவை விடுத்த அதிபர் புதின், ரஷ்யாவின் அணுவாயுத படைப்பிரிவை எதற்கும் தயாரான நிலையில் வைத்திருக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை பேணிவரும் முன்னைய சோவியத் ஒன்றிய நாடான “பெலாரஸ்”, தனது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் ரஷ்யா தனது அணுவாயுதங்களை நிலைநிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மிக அவசரமாக கூடும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், ரஷ்யாவுக்கு எதிரான தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிக்க உள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்க பின்னின்ற நாடுகள், குறிப்பாக நோர்வே, டென்மார்க், ஜெர்மனி போன்ற அயல் நாடுகள் ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதாக சொல்கின்றன.

இந்நிலையில், ரஷ்ய / பெலாரஸ் நிலைகளிலிருந்து அணுவாயுதங்கள் ஏவப்படுமானால், பாதிப்பு அயல் நாடுகளான நோர்வே, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளுக்கு அதீதமாக இருக்கும். 1986 இல் உக்ரைனின் “செர்நோபில்” அணுஉலை விபத்தின் கதிர்வீச்சுக்கள் தொடர்ச்சியாக பல்லாண்டுகள் நோர்வேயின் வட பகுதியில் அவதானிக்கப்பட்டமை நினைவிருக்கலாம். அணுவாயுத பாவனையை விடவும், இப்பொது ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனின் “செர்நோபில்” மற்றும் “ஹார்க்கிவ்” அணுஉலைகளை மெலிதாக கசிய விட்டாலே மேற்கூறிய அயல் நாடுகள் கதிவீச்சால் அதீதமாக பாதிக்கப்படும் நிலை உருவாகும்.

உக்ரைனின் அயல் நாடுகள் உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிகளால் ரஷ்யா வீழும் நிலை வருமானால் சீனா களமிறங்கவும் வாய்ப்புண்டு. ஏனெனில், அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சவாலாக இருந்த பல நாடுகளை அமெரிக்காவும், நேட்டோவும் இணைந்து ஒழித்துவிட்ட நிலையில் இப்போது ரஷ்யா, சீனா, வட கொரியா போன்றவை மட்டுமே அமெரிக்காவுக்கு சவாலாக இருக்கின்றன. ரஷ்யா மேற்குலகத்திடம் வீழுமானால், அமெரிக்காவின் அடுத்த குறி சீனா என்பதை நன்குணர்ந்துள்ள சீனா, நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகவேனும் ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.

ஆகவே, இந்த அயல் நாடுகள் ஆயுதங்களை வழங்கி போரை மென்மேலும் நீடிக்க வழி செய்வதை விடுத்து, ரஷ்யாவுடன் முறையாக பேசி, சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப்பின், 1990 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை முறிவுகளை சரி செய்து, ரஷ்யாவுடன் நட்புறவுகளை பேணுவதே இப்போதைய கட்டாய நகர்வாக இருக்கும்!

பகிர்ந்துகொள்ள

Leave a Reply