ரஷ்யா– மூன்றாம் உலகப் போர் வந்தால் அது அணு ஆயுத போராக மாறும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் தெரிவித்துள்ளார்.
எட்டாவது நாள்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர், 8வது நாளாக தொடரும் நிலையில், இது 3ம் உலகப் போராக மாறுமா என்ற கேள்வி உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அணுஆயுதம்
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ், மூன்றாம் உலகப் போர் வந்தால் அது அணு ஆயுத போராக மாறும் என்றும், அது உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
தயார் நிலையில்
அதேநேரத்தில், அணு ஆயுதத்தை உக்ரைன் பெறுவதை ரஷ்யா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு, தனது ராணுவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டிருந்தார்.
பிற நாடுகள்
எனினும், பிற நாடுகள், உக்ரைன் போரில் தலையிடாமல் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
துல்லிய தகவல்கள்
ரஷ்யாவிடம் 5 ஆயிரத்து 977 அணு ஆயுதங்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அணு ஆயுத நாடுகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் குறித்த துல்லிய தகவல்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை என்றாலும், தோராயமான தகவல்களை சில அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன.
விஞ்ஞானிகள்
அந்த வகையில், அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ரஷ்யாவில் 5 ஆயிரத்து 977 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆயிரத்து 185 கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகளும், 800 அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களும், அணு குண்டுகளை போடும் 580 விமானங்களும் ரஷ்யாவிடம் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அணுகுண்டு
இவை மட்டுமின்றி, மிகச் சிறிய அளவிலான அணு ஆயுதங்கள் பெருமளவில் ரஷ்யாவிடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அணு குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால், தோராயமாக 8 கிலோ மீட்டர் வரை மிகப் பெரிய பேரழிவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.