#அணையாத #தீபம்
நல்லூர் கந்தன் தேர் உருண்டு வரும் வீதியிலே
பன்னிரு நாள் நாவறண்டு கிடந்தான்
திலீபனென்ற தியாகச்செம்மல்!
பசிப்போர் மூட்டியவன் ஊர் திரண்டு எழும் போதினிலே
பன்னிருநாள் உடல்சுருண்டு மடிந்தான்
பார்த்தீபனென்ற ஈகச்சிகரம்!
வெம்பி அழும் குரல்களும்
எம்பி எழும் உணர்வுகளும்
நம்பி நின்ற தோழர்களும்
தாங்க முடியா துயரினுள்
வீழ்ந்து போக
புயலாய் வீசிய அரசியல் புலியொன்று
ஓய்ந்துபோனது!
இயலாமையால் அறப்போர் கலைத்து
எழுவானென
எள்ளிநகையாடிய வீணருக்கு
இருபத்தியாறு
இடியாய் இறங்கியது!
கடுகளவும் தன் உறுதிப்பாட்டில்
உருக்கலையாது உருகிய தியாகியின்
தீராத்தாகம்
தீயரின் முகத்திரையை
கிழித்துப்போட்டது!
ஊழியாடிய ஊழித்தாண்டவம்
பன்னிருநாள் பசித்தீ மூட்டிய
சத்திய தேவனை
வித்துடலாய் எம் கண்முன்னே
வீழ்தியது!
மண்ணையும் மக்களையும்
மானசீகமாக காதலித்த காதலனை
காலனின் கயமையால்
விடுதலையின் வித்தாக
விதைத்தோம்!
தமிழ் இனத்தின் விடுதலைக்காய்
ஊன் ஒறுத்து நீர் தவிர்த்து
உயிர் துறந்தது ஓர் அறத்தின் உச்சம்!
எந்த இனத்திலும் இப்படி ஓர் வீரன்
ஓர்மமாய் சாய்ந்ததில்லை!
அதர்மத்திதினை அழிக்க
அதியுச்ச தியாகத்தை
தன் இனத்திற்காக செய்யமுடியுமென
வயிற்றிலே விடுதலைக்கான யாகத்தை
மூட்டியவன் எங்கள் தியாகத்தின் பிள்ளை!
இத்தியாகங்களை தாண்டி
நாம் தடம்புரள முடியாது
அறம் தவற முடியாது
முடம் ஆனவரின்
முகம் கிழித்து
விடம் தின்றவரின்
இடம் விலகா கொள்கை வழி
தடம் பதிப்போம்!
✍️தூயவன்