என் உயிர் தோழிக்கு.
பாசத்துடன் உன் நேசத் தோழிஎழுதுவது! நான் தரணியில் உன் நினைவுகளோடு வாழ்கின்றேன். என் மனச் சுமைகளை மனக்குமுறல்களை சொற்களாக்கி, வார்த்தையின் வடிவம் கொடுத்து, என் கண்ணீரோடு வரிகளாக்கி, உனக்காக ஒரு மடல்… எனது இக் கண்ணீரின் மடல் உன் நினைவுகளோடு சங்கமிக்கும் என்ற ஆசையில் எழுதுகின்றேன்.
விழியரசி நீயும் நானும் 2000 ஆம் ஆண்டு அண்ணன் வழியில் இணைந்து ஒன்றாகவே எமது ஆரம்ப இராணுவ பயிற்சியை நிறைவு செய்து ஒரே படையணிக்கு அனுப்பப் பட்டோம் .அன்றிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை ஒன்றாகவே இருந்தோம் .எப்படி மறக்க முடியும் அந்த அழகிய நாட்களை.
கடற்புலிகள் படையணியில் ஆரம்பத்தில் நீச்சல் பயிற்சி பயில்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டோம். அதை நினைக்கையில் இப்போது சிரிப்புதான் வருகிறது .கடலில் இறங்குவதற்கு கூட பயப்பட்டோமே. ஏனென்றால் நாம் பிறந்து வளர்ந்தது எல்லாமே ,கடலே இல்லாத வவுனியா மாவட்டத்தில் அல்லவா… பயிற்சி ஆசிரியரின் வற்புறுத்தலாலும், அன்பான கண்டிப்புகளாலும் மெல்ல மெல்ல இறங்கி நீச்சல் கற்றுக் கொண்டோம் அல்லவா…
விழியரசி உனக்கு ஞாபகமிருக்கிறதா? பயிற்சியின் சிறிய இடைவெளியில் பாலும் எள்ளுப்பாகுவும் தரப்படும். அதற்காக மணல் தரையில் ஓடி வந்து ஒருவர் மேல் ஒருவராக விழுந்தோமே..அன்று உனது உதடு கூட வெடித்து பல்லுக்குத்தி குருதி வழிந்ததே. ஆனால் அதனையும் பொருட்படுத்தாது விழுந்து விழுந்து சிரித்தாய் அல்லவா எள்ளுப்பாகு சாப்பிட முடியவில்லையே என்று.
அன்றிலிருந்து உன்னை “எள்ளு “என்று செல்லமாக அழைப்போமே. உனது வலியையும் மீறி மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் உனது இயல்பு அனைவரையும் கவர்ந்தது .கடின பயிற்சிகளின் போது அணிகள் பிரிக்கப்படும். அனைவரும் உனது அணியில் இணைய ஆசைப்படுவார்கள். ஏனென்றால் எவ்வளவு கடின பயிற்சிகளையும் அதன் களைப்பு தெரியாமல் உனது செல்ல குறும்புகளால் இலகுவாக்கி விடுவாய் அல்லவா.
இறுதியாக 2009 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஒரு நாள் ஒரு நடவடிக்கைக்காக கடலுக்குள் சென்றாயே பல போராளிகளுடன். ஆனால் நாட்கள் பல கடந்து வாரங்களாகி மாதங்கள் ஆகின. உனது தகவல்கள் எதுவும் கிடைக்கவேயில்லை. 2009ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 18 ஆம் திகதி தமிழீழத்தின் நிலைமை யாருமே எதிர் பார்க்க முடியாதவாறு தலைகீழாக மாறி போனதே .நீ அறிவாயோ…? இல்லையோ..? நான் அறியேன்….
2009ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 22ஆம் திகதி நான் விழுப்புண் அடைந்து முதலுதவி மட்டுமே அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலமாக புல்மோட்டை கடற்பரப்பு ஊடாக பதவியா ,பின் தம்புள்ளையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று ஒருவாறு ஓரளவு நலமடைந்து வவுனியா செட்டிகுளம் முள்வேலி முகாமிற்கு வந்து சேர்ந்தேன் மக்களோடு மக்களாகவே.
விழியரசி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? கப்பலில் போனதிலிருந்து பதவியா தம்புள்ளை வரைக்கும் நடந்தவைகள் எனக்கு முழுவதுமாக ஞாபகமில்லை. ஏனெனில் எனக்கு பின் முதுகு தோள்பட்டையில் எறிகணைச் சிதறல் நுரையீரல் பகுதியில் இருக்கிறது .அதனால் சுவாசிக்க கூட என்னால் முடியாமல், குருதி ஏராளமாக வெளியேறியதால், பலமுறை திரும்பத் திரும்ப காயப்பட்டதாலும் உடல் பலவீனமடைந்து இருந்தது .அந்த அரை மயக்கத்திலும் என் உயிர் தோழி உன் நினைவே என் நெஞ்சில் நிறைந்து இருந்தது.
தம்புள்ளையில் சிங்களவன் படுத்திய பாடுகள் ஏராளம் ஏராளம் …அதுவும் தனியாக இருந்தவர்கள் இளம் தலைமுறையினரிடம் அவர்களுடைய காயத்தின் வலிகளையும் பொருட்படுத்தாது சிஐடி விசாரணைகள் வேறு. அந்த நிலையில் எமது கையில் ஒரு துப்பாக்கி கிடைக்காதா என மனம் ஏங்கியது …உனது பிரிவு என்னை தினமும் வேதனைப்படுத்தியது.
விழியரசி ஏதோ பல வலிகளை சுமந்து, குடும்பம் என்ற பிணைப்பில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம். எனக்கு அன்று இருந்த நிலைமையில் அது அவசியமும் கூட. வேறு கதியின்றி, கண்ணீரோடு தினம் என் வாழ்க்கைப் பயணம் தொடர்கின்றது. விடிகின்ற காலை தினமும் உன்னை பற்றிய தகவல் ஏதாவது என் செவிப்பறைக்கு எட்டிடுமா… என பேராவல் கொண்டு ஏங்கிப் போகிறது என மனம். விழியரசி உன்னை போல் முடிவின்றி போன ஈழத்தின் முத்துக்கள் எத்தனை… அவர்களுக்கு என்ன வழிஎன்று தவிக்கிறதே தினமும் என்மனம்.
ஆனாலும் விழியரசி 2009 எமக்கு பின்னடைவாக போனாலும் விரைவில் இதற்கெல்லாம் ஒரு முடிவு கிடைக்கும். நமக்கெல்லாம் ஒரு விடிவு கிடைக்கும். என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் நாட்கள் நகர்கிறது. அண்ணனின் வழிகாட்டலில் மாவீரர் துணையுடன் மீண்டும் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையில்… என் மன வலிகளின் நேச மடலை நிறைவு செய்கின்றேன்.
நன்றி
இப்படிக்கு
உயிர்த்தோழி
நிவேதா.
பகிர்வு
– அருந்தமிழ் –