அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் விண்வெளி வீராங்கனை என்ற சாதனையோடு பூமி திரும்பிய கிறிஸ்டினா கோச்! கஜகஸ்தானில் விண்வெளி ஓடம் மூலம் தரை இறங்கினார்.
அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த மார்ச் 14, 2019 சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். இன்றுடன் (வியாழக்கிழமை ) அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 328 நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார்.
இன்று கிறிஸ்டினா கோச் பூமிக்குத் திரும்பி உள்ளார். 36 நாடுகளைச் சேர்ந்த சுமார் 550-க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் இன்றுவரை விண்வெளியில் வலம் வந்திருக்கிறார்கள். 18 விண்வெளி வீரர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) கிறிஸ்டினா கோச் தங்கியிருந்தபோது, 4 முறை விண்வெளியில் நடந்து உள்ளார். அக்டோபர் 12 ஆம் தேதி முதல் தனது சக ஊழியரும் சிறந்த நண்பருமான ஜெசிகா மீருடன் விண் வெளியில் நடந்து இருவரும் உலகின் தலைப்பு செய்தியானார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே ஏழு மணி நேரத்திற்கும் மேலான பயணத்தில், பெண்கள் இருவரும் வெண்வெளி நிலையத்தின் சூரிய வலையமைப்பிற்கு கூடுதலாக உடைந்த மின் கட்டுப்படுத்தியை சரிசெய்யும் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.
நிலையத்தின் சூரியசக்தி அமைப்பிற்கான புதிய சூரிய பேட்டரிகளை நிறுவ ஜனவரி மாதத்தில் மீண்டும் இரண்டு முறை வெளியே சென்று வந்தனர்.
15 பெண்கள் ஒரு விண்வெளிப் பயணத்தை இதற்கு முன் நடத்தியிருந்தாலும், ஒவ்வொரு முறையும் அவர்கள் ஆண் சகாக்களுடன் சென்று வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.