உலகமே கொரோனாவுக்கு அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், மெக்சிகோவின் ஒரு சிறிய நகரத்தில் உள்ள மக்கள் அதைப்பற்றி பெரிதாக கவலைகொள்வதில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும், இரவானால் வானத்திலிருந்து வைரஸ் பொழிவதாக நம்பும் சான் லூயிஸ் பொட்டோசி (San Luis Potosí) மக்கள், கொரோனா அதுவாகவே அழிந்துவிடும் என்றும் நம்புகின்றனர்.
மத்திய மெக்சிகோவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம், சான் லூயிஸ் பொட்டோசி (San Luis Potosí). கார் பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த இந்த நகரம் எப்போதும் பரபரப்பாகவே காட்சியளிக்கும். மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
நாட்டின் பிற பகுதியில் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க சான் லூயிஸ் பொட்டோசி மக்கள் மட்டும் அதை கடைபிடிக்க மறுத்துவிட்டனர்.
கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் இங்கு, கொரோனா வைரஸ் மெக்சிகோ அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கிருமி என்று நம்ப படுகிறது. அரசின் விமானப்படை விமானங்கள், இரவு நேரத்தில் நகரத்தின் மீது பறந்து கொரோனா வைரசை பரப்புவதாக சான் லூயில் பொட்டோசி முழுவதும் வாட்ஸ் ஆப் தகவல் பரவியுள்ளது. இந்த தகவலை உண்மை என்றே நம்பியுள்ள மக்கள், அரசு விதித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாட்டை மதிக்க மறுக்கின்றனர். கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்ற சுகாதரப்பணியாளர்கள் பலரை, கடுமையாக தாக்கியுள்ளனர்.
சான் லூயிஸ் பொட்டோசியில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் 74 பேர் மட்டுமே கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது சுமார் 400 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கை கடைபிடிக்காத சான் லூயிஸ் பொட்டோசியில், மெக்சிகோவின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது பாதிப்பு குறைவுதான் என்றாலும், இதேநிலை நீடித்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று மெக்சிகோ சுகாதாரத்துறை கவலையில் உள்ளது.
இன்றும், இரவானால் வானத்திலிருந்து வைரஸ் பொழிவதாக நம்பும் சான் லூயிஸ் பொட்டோசி மக்கள், கொரோனா அதுவாகவே அழிந்துவிடும் என்றும் நம்புகின்றனர்.