கிழக்கு மாகாணத்தில் கறவை மாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட காணியில் அத்துமீறி விவசாயத்தில் ஈடுபடும் 13 சிங்கள மக்களை காணியை விட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளியாட்கள் சிலர் தாற்காலிக வீடுகளை அமைத்து விவசாயம் செய்து வருவதாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வருடம் செப்டெம்பர் 22ஆம் திகதி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை நவம்பர் 13ஆம் திகதி அறிவித்து ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவணை ஆகிய பிரதேசங்களில் புல்வெளிகளை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகளை அங்கிருந்து அகற்றக் கோரி தமிழ் பால் பண்ணையாளர்கள் மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம் இன்று 60ஆவது நாளாகவும் தொடர்கிறது.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் சட்ட ஆவணங்கள் இருப்பின் அவற்றை, நவம்பர் 13 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி இந்த 13 பேருக்கும் உத்தரவிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அரச அதிகாரியினால் வழங்கப்பட்ட ஆவணங்களை சிங்கள விவசாயிகளால் நவம்பர் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்வைக்க முடியாமல் போனதால், காணியை விட்டு வெளியேறுமாறு நீதவான் அன்வர் சதாத் உத்தரவிட்டதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் சார்பில் அரச சட்டத்தரணி டில்கா டி சில்வா நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்.
மாடுகள் மேய்ந்த நிலத்தில் பாதியை சிங்கள விவசாயிகள் கையகப்படுத்தியுள்ளதாகவும், இதனால் பால் பண்ணையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு, மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் அமைந்துள்ள மேயச்சல் தரையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட அநுராதா யஹம்பத்தினால் 150 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். இந்த குடும்பங்கள் சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாரம்பரிய கறவை மாடுகளின் உரிமையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்ட 6,000 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தில், சிங்கள விவசாயிகள் 2,500 ஏக்கர் நிலப்பரப்பை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து விவசாயத்தில் ஈடுபடுவதாக பால் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பால் விவசாயிகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
ஜனாதிபதியின் கிழக்கு விஜயத்தின் போது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பௌத்த பிக்கு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நாற்பது பேருக்கு எதிராக பொலிஸார் ஏற்கனவே நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.
பால் பண்ணை பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொலிஸாருக்கும் மகாவலி அதிகாரசபை அதிகாரிகளுக்கும், பால் பண்ணையாளர்களின் நிலத்தை அபகரித்து விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்ற சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.