அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று தெரிந்து கொண்ட தகவல்களுக்கமைய அண்மையில் லொஹான் ரத்வத்தையின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மையானவை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நிலைமையை ஆராய்வதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார உள்ளிட்டோர் நேற்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாம் சிறைச்சாலைக்கு வருகை தரவுள்ளதாக ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த போதிலும் இன்று எமக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சபாநாயகரை தொடர்பு கொண்டதன் பின்னரே எமக்கு உள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான எமக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பிரஜைகளின் நிலைமை என்னாவாயிருக்கும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
நாம் உள்ளே சென்று தெரிந்து கொண்ட தகவல்களுக்கமைய அண்மையில் லொஹான் ரத்வத்தையின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில் துப்பாக்கியுடன் வந்ததாகவும் , போதையில் இருந்தமையால் துப்பாக்கியை எடுத்து அச்சுறுத்தியதாகவும் கைதியொருவர் கூறினார்.
இதன் போது தவறுதலாகவேனும் அந்த துப்பாக்கி இயக்க்பபட்டு நாம் கொல்லப்பட்டிருந்தால் நாம் அவரை கொல்ல முற்பட்டதால் ஏற்பட்ட கலவரம் என்று கூறியிருப்பார்கள் என்றும் அந்த கைதிகள் எம்மிடம் தெரிவித்தனர். இந்த கைதிகளை விடுதலை செய்து தமிழ் மக்களின் மனதை வெல்லுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ,
‘சர்ச்சைக்குரிய இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் வினவினோம். அப்போது அவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலையில் சி.சி.டி.வி கமராக்கள் இல்லை என்று கூறினார்கள். இருப்பினும் அந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் உண்மை என்பதை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் எம்மிடம் உறுதிப்படுத்தினார்கள். எனவே இதுகுறித்து உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகும். எமக்கு அரசாங்கத்துடன் எந்தவொரு தனிப்பட்ட பகையும் இல்லை.
ஆனால் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்குத் தெரிவான நாம், இவ்வாறான பிரச்சினைகளின்போது பாதிக்கப்பட்ட தரப்பினருக்காகக் குரல்கொடுக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றோம்’ என்று குறிப்பிட்டார்.
அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார இதுபற்றிக் கூறுகையில்,
இந்தச் சம்பவம் தொடர்பான உண்மைத்தகவல்களைத் திசைதிருப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படக் கூடும் என்ற சந்தேகம் காணப்படுகின்றது. அதற்கேற்றவாறு நாம் சிறைச்சாலைக்கு சென்றபோது, இத்தகைய சம்பவம் நடைபெற்றதே தமக்குத் தெரியாது என்றும் சிலர் கூறினார்கள். இருப்பினும் இந்தச் சம்பவம் இடம்பெற்றதை கைதிகள் உறுதிப்படுத்தியிருப்பதுடன் தம்மை சிறைச்சாலை அதிகாரிகளே பாதுகாத்ததாகவும் குறிப்பிட்டனர். எனவே இச்சம்பவத்தை மூடிமறைப்பதற்கு முற்படாமல், உரியவாறு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.