அன்புள்ள தங்கச்சிக்கு!

You are currently viewing அன்புள்ள தங்கச்சிக்கு!

உன்னை வாழ்த்தவேண்டுமென்று
மனமேங்குது!

ஆனால்?

போர்த்தியிருக்கிற கொடியின்
வானூர்திகள் கக்கித்துப்பிய
கந்தக நெருப்புகளில்
வெள்ளைச்சீருடைகள்
குதறி எறியப்பட்ட
கோர நினைவுகள்
நெஞ்சறையை தடுக்கின்றது!

வீரம் விளைந்த மண்ணிலிருந்து
மீண்டும் தீரத்தை புடம்போட்டுக்
காட்டிய செய்திகள்
செவிப்பறைகளை அறைந்தபோது
கவிதை எழுதி
புளகாங்கிதம் அடையவேண்டுமென்று
மூளையின் உள்த்தட்டில்
உரசிச்செல்கிறது!

ஆனால்?

நீ கம்பீரமாய் போர்த்தி மகிழும்
சிறீலங்கா தேசியக்கொடியில்
வாளேந்திய சிங்கங்கள்
ஊர் புகுந்து மனிதவேட்டையாடிய
ஆறத்துயரின் அழுத்தங்கள்
தீராத காயத்தை தீண்டியதால்
உன்னை வாயார வாழ்த்தமுடியவில்லை!

செஞ்சோலையிலும்
நாகர்கோவிலிலும்
சிங்கக்கொடிகள்
தின்று குவித்த
பச்சிளம் பாலகரின்
பால்வடியும் முகங்கள்
இன்னும் அகத்தில்
கந்தகம் குதறிய வலிகளில்
துடிப்பதால் அவர்களை
தொந்தரவுசெய்ய முடியவில்லை!

அதனால்
எல்லோர்போலவும்
வாழ்த்தவும் முடியவில்லை!

வீரமறத்திகளாய் புறமுதுகுகாட்டாது
போர்க்களத்தில்
செங்களமாடி
செங்கந்தள்களாய்
மடிந்தபோது
மந்திகளின் கையில்
அகப்பட்ட பூமாலையாய்
பிணங்களை புணர்ந்து
இரணங்களை நிரப்பிய
சிங்கத்தின் கொடியை
நீ அங்கத்தில் சுமப்பதால்
நீ தங்கமெடுத்தாலும்
பொங்கு தமிழால் போற்றமுடியவில்லை!

அதை அடுத்தவர்களுக்கு
பகிர்ந்து பாராட்டி
மகிழவும் முடியவில்லை!

அகவை பேதமின்றி
அழித்தொழித்தவன்
ஆக்கிரமிப்புக் கொடியை
எந்த கொம்பன் எந்தினாலும்
காயத்தினால் சுருண்ட இதயத்தில்
இடமில்லை!

நீ எம் மண்ணை அழித்தவனுக்காய்
விண்ணேறி விளையாடி
வந்துள்ளாய்!
அதனால் உன் ஆழுமையை
நிலைநாட்டியுள்ளாய்!
நீ தமிழச்சியாய் இருந்தாலும்
எம் இனத்தை அழித்த கொடி
உன்னை போர்த்தி நிற்கும்வரை
நம்மினத்திற்கான வெற்றியாய்
என்னால் பொய்கூறமுடியவில்லை
வெற்று வாழ்த்து எழுதவும் இயலவில்லை!

மன்னித்துவிடு!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply