இலங்கை அரசின் கோரிக்கையின் அடிப்படையில் மேதகு என்ற திரைப்படத்தின் ஒளிபரப்பை தடை செய்யுமாறு கம்போடியாவின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அங்குள்ள தொலைக்காட்சி சேவைகளுக்கு அறிவுறுத்தலை அனுப்பியுள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கையை சித்தரிக்கும் மேதகு திரைப்படம் கம்போடியாவின் சமூக ஊடகங்கள், வலைத்தளங்கள் மற்றும் BS Value app எனப்படும் செயலிகளில் அதிகமாக பகிரப்பட்டதையடுத்து இந்த படத்தை கம்போடிய தொலைக்காட்சிகளும் ஒளிபரப்ப தயாராகியிருந்தன.
இந்த விடயத்தை அறிந்துகொண்ட இலங்கை அரசாங்கம் இதுகுறித்து கம்போடியாவிடம் அவசரமாக முறையிட்டதை அடுத்துஇலங்கை அரசின் கோரிக்கையின் அடிப்படையில் மேதகுவின் ஒளிபரப்பை தடை செய்யுமாறு கம்போடியாவின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கியே கன் ஹாரித் கம்போடிய தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த செய்தி கம்போடிய ஊடகங்களில் வெளியானதை அடுத்து தற்போது கம்போடியாவின் சமூக ஊடகங்கள், வலைத்தளங்களில் மேதகு திரைப்படத்தை பார்வையிடும் ஆர்வம் உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.