அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா விமான எம்.கியூ-9 ட்ரோனை நேற்று சுட்டு வீழ்த்தியதாக யெமனின் ஹுதி கிளர்ச்சிக்குழுவின் பேச்சாளர் யஹ்யா சரய் தெரிவித்தார்.
ஹுதி கிளர்ச்சிக் குழுவுக்கு எதிராக அமெரிக்கா வான் வழித் தாக்குதல்களை முன்னெடுத்துவரும் சூழலில் இந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
காசா மீதான யுத்தத்தை நிறுத்துமாறு கோரி இஸ்ரேல் மீதும் செங்கடல் வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்கள் மீதும் கடந்த 2023 ஒக்டோபர் முதல் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றோம்.
அதற்கு எதிராக 2024 ஜனவரி முதல் யெமன் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் விமானத்தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. அதிலும் கடந்த மார்ச் 15 ஆம் திகதி முதல் யெமனின் பல மாகாணங்கள் மீது தொடராக தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
நாமும் பதில் தாக்குதல்களை முன்னெடுக்கின்றோம். அந்த வகையில் கடந்த பத்து நாட்களுக்குள் மூன்றாவது ட்ரோனை உள்ளுரில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையைப் பயன்படுத்தி நேற்று சுட்டு வீழ்த்தியுள்ளோம்.
ஆனால் காசா யுத்தத்திற்கு எதிராக நாம் ஆரம்பித்த தாக்குதல் நடவடிக்கையின் கீழ் வீழ்த்தப்பட்டுள்ள 18 வது ட்ரோன் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆளிலில்லா விமானம் ஒன்றின் பெறுமதி சுமார் 32 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள அதேநேரம் கடந்த மார்ச் 15 ஆம் திகதி முதல் ஹுதிக்கள் மீது முன்னெடுக்கப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு ஒரு பில்லியன் டொலர் செலவு அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.