அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தைக் கடந்தது. நேற்று வெள்ளிக்கிழமை 7 இலட்சம் மரணங்கள் என்ற மோசமாக மைல்கல்லை அமெரிக்கா எட்டியது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தினசரி சராசரியாக 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.
உலகெங்கும் கொரோனா மரணங்கள் 50 இலட்சத்தை நெருங்கிவரும் நிலையில் உலகின் ஒட்டுமொத்த கொரோனா மரணங்களில் 14% அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. அத்துடன், உலக கொரோனா தொற்றாளர்களில் 19வீதமானவர்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளனர்.
அமெரிக்காவில் வேகமாகப் பரவும் டெல்டா திரிபால் மீண்டும் தொற்று நோய் தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரத்தில் தினசரி சராசரியாக 106,400 தொற்று நோயாளர்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளனர்.
சமீபத்திய வாரங்களில் தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட தொற்று நோயாளர் தொகையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டாலும் சில மாநிலங்கள், குறிப்பாக நாட்டின் தென் பகுதியில் தொற்று நோயாளர் தொகை கணிசமாக அதிகரித்து, நாட்டின் சுகாதாரத் துறையில் பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
தொற்று நோயின் தீவிரத்துக்கு மத்தியில் 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு 3 ஆவது பூஸ்டர் தடுப்பூசி போடும் நடவடிக்கையை அமரிக்கா ஆரம்பித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த திங்களன்று பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார். தகுதியான அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியத்தை அவா் வலியுறுத்தினார்.
அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் பலர் இதுவரை இரண்டு தடுப்பூசிகளையும் பெறாதுள்ள நிலையில் அமெரிக்காவில் பூஸ்டர் எகப்படும் மூன்றாவது தடுப்பூசி போடப்படுவது குறித்து சில தரப்புக்கள் விமர்சனம் வெளியிட்டுள்ளன. எனினும் அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் திட்டத்தின் அடிப்படையில் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தை பைடன் அறிவித்தார்.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகளின்படி, அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 56% பேர் இதுவரை இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். சுமார் 65% பேர் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.