அமெரிக்காவில் பயங்கரம்: காவற்துறையால் 46 முறை துப்பாக்கியால் சுடப்பட்ட கருப்பின இளைஞர்!

You are currently viewing அமெரிக்காவில் பயங்கரம்: காவற்துறையால் 46 முறை துப்பாக்கியால் சுடப்பட்ட கருப்பின இளைஞர்!

அமெரிக்காவில் ஓஹியோ காவல்துறையினரால் கடந்த மாதம் கொல்லப்பட்ட 25 வயது கறுப்பின இளைஞனின் உடலில் 46 துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் எந்த தோட்டாவால் கொல்லப்பட்டார், அல்லது மொத்தம் எத்தனை முறை துப்பாக்கியால் சுட்டனர் என்பதை அறிய இயலாது என்று மருத்துவப் பரிசோதகர் கூறியுள்ளார்.

அக்ரோன் நகரில் ஜெய்லேண்ட் வாக்கர் மரணத்திற்கு நூற்றுக்கணக்கானோர் இரங்கல் தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதனிடையே, போராட்டக்களமாக நகரம் மாறுவதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மருத்துவ ஆய்வாளரின் கூற்றுப்படி, அக்ரோன் நகரில் ஜூன் 27 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் வாக்கரின் இதயம், நுரையீரல் மற்றும் தமனிகளில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது என தெரியவந்துள்ளது.

சாலையில் தடுத்து நிறுத்தப்பட்ட ஜெய்லேண்ட் வாக்கர், ஓடும் வாகனத்தில் இருந்து குதித்து வெளியேறி, அருகாமையில் உள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு சென்று மறைந்துள்ளார். ஆனால் துரத்தி சென்ற பொலிசார் அவர் மீது பல பக்கத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.

இருப்பினும், வாக்கர் அந்த நேரத்தில் நிராயுதபாணியாக இருந்தார் எனவும் அவரைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் மூலம் கூறியுள்ளனர்.

முதற்கட்ட பரிசோதனையில், வாக்கரின் உடலில் 60 துப்பாக்கி குண்டு காயங்கள் காணப்பட்டன. ஆனால் ஒரே தோட்டாவால் பல காயங்களை ஏற்படுத்த முடியும் என மருத்து ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள குறித்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட எட்டு அதிகாரிகளில் ஏழு பேர் வெள்ளையர்கள் எனவும் ஒருவர் கருப்பினத்தவர் எனவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி ஓஹியோ மாகாண விசாரணை அதிகாரிகளால் அவர்கள் தற்போது ஊதியத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply