அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அமெரிக்கா முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிசூரி மாகாணத்தில் 4 பேரும், டெக்சாஸ், புளோரிடா மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் தலா 2 பேரும், அயோவா மாகாணத்தில் ஒருவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இரவுநேர கேளிக்கை விடுதி மற்றும் மதுபான விடுதிகளில் நடந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. எனினும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அமெரிக்கா முழுவதும் நடந்த 41 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 210 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.