அமெரிக்க மாநிலமான “Gerogia” மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான “Atlanda” வில், காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் இன்னுமொரு கறுப்பின அமெரிக்கர் கொல்லப்பட்டுள்ளதால், அங்கு மீண்டும் பாரியளவில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
விரைவு உணவகமான “Windey´s” உணவகத்திற்கு செல்லும் வாகனப்பாதையில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்திலேயே கொலையுண்ட நபர் உறங்கியதாகவும், அதனால், உணவகத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் அங்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், மேற்படி கொலையுண்ட நபர் மதுபோதையில் இருந்ததால், அவரை இலத்திரனியல் அதிர்ச்சி கொடுக்கும் கருவியை பாவித்து கைது செய்ய முயன்றபோது, காவல்துறையினரோடு அந்த இடத்திலேயே கைகலப்பில் ஈடுபட்ட கொலையுண்ட நபர், காவல்துறையினரிடமிருந்து அவர்களின் இலத்திரனியல் அதிர்ச்சி கொடுக்கும் கருவியை பிடுங்கிக்கொண்டு தப்பியோடியதாகவும், காவல்துறையினர் அவரை துரத்திச்சென்ற போது, காவல்துறையினர்மீது அவர், இலத்திரனியல் அதிர்ச்சி கொடுக்கும் கருவியை பாவிக்க முயன்றதால் அவரை சுட்டதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட குறித்த நபர் மரணமானதால், அவ்விடத்தில் மீண்டும் போராட்டங்களை அதிகளவில் தலைதூக்கியுள்ளதாகவும், குறித்த விரைவு உணவகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த கறுப்பின அமெரிக்கர்மீது சூடு நடத்திய காவல்துறை ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், நடந்த குற்றச்செயலுக்கு பொறுப்பேற்று, நகரத்தின் காவல்துறை ஆணையாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
காணொளி இணைப்பு:
https://www.nrk.no/urix/opptoyer-i-atlanta-etter-at-mann-ble-skutt-av-politiet-1.15052643