தாய்வான் விவகாரம் உச்சநிலையை அடைந்துள்ள நிலையில், அமெரிக்காவுடனான தொடர்புகளை சீனா துண்டிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க காங்கிரஸ் தலைவர் “நான்ஸி பேலோசி” அம்மையாரின் சர்ச்சைக்குரிய தாய்வான் வருகையை தொடர்ந்து சீனா அதியுச்ச கொதிநிலைக்கு சென்றுள்ளதன் வெளிப்பாடாக, அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான “பென்ரகன்” உடனான தொடர்புகளை சீனா துண்டித்துக்கொண்டுள்ளதாக “Reuters” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, அமெரிக்க – சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையே நடைபெறவிருந்த உயர்மட்ட சந்திப்பு உட்பட, எதிர்காலத்தில் நடத்துவதென முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த அரசு முறையான சந்திப்புகளையும் சீனா இரத்து செய்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்தலைமையகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட அழைப்புக்களை சீன பாதுகாப்புத்தலைமையகம் புறக்கணித்துள்ளதோடு, வொஷிங்டன் உடனான தொடர்புகளையும் பீஜிங் முறித்துக்கொண்டுள்ளதாக “CNN” செய்தி நிறுவனத்தை மேற்கொள்காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன.
இதுவரை அமெரிக்கா – சீனாவுக்கிடையில், இருதரப்பு ஒத்துழைப்போடு நடைபெற்று வந்த சட்டவிரோத குடியேற்ற தடுப்பு, கிரிமினல் குற்றத்தடுப்பு, சுற்றுச்சூழல் பிதுக்கப்பு தொடர்பான ஒத்துழைப்பு உட்பட பல்வேறு வேலைத்திட்டங்களையும் சீனா முறித்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.