அமெரிக்கா முழுவதும் பரவிவரும் இனவெறிக்கெதிரான போராட்டங்கள்! நிலக்கீழ் பதுங்கறையில் அமெரிக்க அதிபர்!!

You are currently viewing அமெரிக்கா முழுவதும் பரவிவரும் இனவெறிக்கெதிரான போராட்டங்கள்! நிலக்கீழ் பதுங்கறையில் அமெரிக்க அதிபர்!!

அமெரிக்கா முழுவதும் வேகமாக பரவிவரும் இனவெறிக்கெதிரான போராட்டங்கள், அமெரிக்க அதிபரின் வெள்ளைமாளிகை வரை பரவியுள்ளதாகவும், இதனால் பாதுகாப்புக்கரணங்களுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிலக்கீழ் பதுங்கறையொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் “Kentucky” மாநிலத்தில் கறுப்பினத்தவர் ஒருவரை கைதுசெய்ய முயன்ற காவல்த்துறையினரில் ஒருவர், குறித்த கறுப்பினத்தவரின் கழுத்தில் கால்களால் அழுத்தியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குறித்த கறுப்பினத்தவர் மரணமானதை தொடர்ந்து, ஏற்கனவே அம்மாநிலத்தில் ஆரம்பநிலையிலிருந்த போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்தன.

“Kentucky” மாநிலத்தில் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியவில்லையென தெரிவித்த மாநில ஆளுநர், அமெரிக்க தேசிய பாதுகாப்புப்படைகளின் உதவியை கோரியிருந்ததோடு, மேற்படி விடயம் தொடர்பில் “பொதுச்சொத்துக்களை சூறையாடுபவர்கள் சுடப்படுவார்கள்” என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்தும் போராட்டங்களை மேலும் உச்ச நிலைக்கு கொண்டுவந்துள்ளது.

கடந்தகாலங்களில் அமெரிக்க காவல்த்துறையினரின் இனவெறி நடவடிக்கைகள் காரணமாக கறுப்பின மக்கள் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், கறுப்பின அமெரிக்கர்களுக்கிடையில் கனன்றுகொண்டிருந்த வெறுப்புணர்வுகள் போராட்டமாக வெடித்துள்ளதால், அமெரிக்காவெங்கும் இனவெறிக்கெதிரான போராட்டங்கள் மிக வேகமாக பரவி வருகின்றன.

அமெரிக்கா முழுவதும் பரவிவரும் இனவெறிக்கெதிரான போராட்டங்கள்! நிலக்கீழ் பதுங்கறையில் அமெரிக்க அதிபர்!! 1

இந்த நிலையில், வெள்ளைமாளிகையை நோக்கி நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அணிதிரண்டு வந்ததோடு, அங்கு பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த தேசிய பாதுகாப்புப்படைகள்மீது கற்களையும் வீசியதால், பாதுகாப்புக்கரணங்களுக்காக அதிபர் டிரம்ப் நிலக்கீழ் பதுங்கறை ஒன்றுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளதாக “AP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

11.11.2001 இரட்டைக்கோபுரங்கள் மீதான தாக்குதல்களுக்குப்பின், அமெரிக்க அதிபர் இரகசிய பாதுகாப்புப்படைகளால் கையகப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

“CNN” தொலைக்காட்சியின் கணக்கெடுப்பின்படி, அமெரிக்கா முழுவதிலும் சுமார் 4000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதிலும் 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

போராட்டக்காரராகளுக்கும், காவல்த்துறைக்குமிடையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மோதல்களில் “Kentucky” மாநிலத்தில் ஒரு போராட்டக்காரர் காவல்த்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், பத்திரிகையாளர்கள் உட்பட பல போராட்டக்காரர்கள்மீது இறப்பர் குண்டுகளால் சுடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காவல்த்துறையினர், தமது வாகனங்களை மக்கள் கூட்டங்களுக்குள் அதிரடியாக செலுத்தியுள்ளதாகவும், இதனால் கோபமடைந்த மக்கள் அந்த வாகனங்களுக்கு தீ மூட்டியுள்ளதாகவும் உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கைகலப்புக்களில் சுமார் 60 தேசிய பாதுகாப்புப்படையினர் காயமடைந்திருப்பதாகவும் மேலும் தெரியவருகிறது.

அமெரிக்கா முழுவதும் பரவிவரும் இனவெறிக்கெதிரான போராட்டங்கள்! நிலக்கீழ் பதுங்கறையில் அமெரிக்க அதிபர்!! 2

கறுப்பின மக்களோடு இணைந்து வெள்ளையின அமெரிக்கர்களும் போராட்டங்களில் குதித்துள்ளதாகவும், நியோர்க் நகர முதல்வரின் மகளும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த வேளை காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவெங்கும் பரவியுள்ள இனவெறிக்கெதிரான போராட்டங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்கு, இனவெறி அமைப்புக்களும், இனவெறிக்கொள்கையுடைய வலதுசாரி தீவிரவாத அமைப்புக்களும் முயன்று வருவதாக சமூக ஆர்வலர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறானவர்களும் களமிறங்கும் பட்சத்தில், நிலைமைகள் இன்னும் மோசமாகலாமெனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலைமைகளை தாங்களும் அவதானித்து வருவதாக தெரிவித்திருக்கும் சீனா, நிறவெறியும், இனவெறியும் அமெரிக்காவின் சீழ்பிடித்த வியாதி என தெரிவித்திருக்கிறது. நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவருவதோடு, போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த அதிபர் டிரம்ப் முன்வரவேண்டுமென ஈரான் வேண்டுகோள் விடுத்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது காவல்த்துறையும், தேசிய பாதுகாப்புப்படைகளும் மேற்கொண்டுவரும் அடாவடித்தாக்குதல்களை சீனாவும், ஈரானும் கடுமையாக கண்டித்துள்ளன.

செய்தி மேம்பாடு:

அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் காவல்த்துறையினரும், இன மற்றும் நிறவெறிக்கெதிரான போராட்டங்களில் தம்மையும் இணைத்துக்கொண்டு பாதிக்கப்படும் மக்களுக்கான தார்மீக ஆதரவுகளை தெரிவித்துவருவதாக பிந்திக்கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.nrk.no/urix/amerikansk-politi-deltar-i-demonstrasjonene-mot-politivold-1.15036352

பகிர்ந்துகொள்ள