அமெரிக்காவில் நடைபெற்றுவரும் உரிமைப்போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நோர்வேயிலும் நாளைய தினம் (05.06.20) முன்னெடுக்கப்படவிருந்த பாரிய போராட்டத்துக்கு நோர்வே அரசு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“நோர்வே – ஆபிரிக்க மாணவர் அமைப்பு” ஏற்படு செய்துவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக 15.000 இளையோர்களும், பொதுமக்களும் ஆர்வம் காட்டியுள்ள நிலையில், “கொரோனா” நிலைமைகளை காரணம் காட்டி வெறும் 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்க முடியுமென காவல்துறை தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

தலைநகர் “Oslo” உள்ளிட்ட நோர்வேயின் பெருநகரங்களான “Trondheim”, “Bergen” ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் ஒழுங்கு செயயப்பட்டுவரும் நிலையில், இது விடயம் தொடர்பில் கருத்துரைத்த நோர்வே சுகாதார அமைச்சர் “Bent Høie”, மக்களின் உணர்வுகளை தான் புரிந்து கொள்வதாகவும், எனினும் மக்கள் அதிகளவில் கூடுவதால் மீண்டும் “கொரோனா” வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இருப்பதால், அதிகளவில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட 50 பேர் மாத்திரம் என்பதற்கும் மேலாக அதிகளவில் மக்கள் கூடுவதற்கான அனுமதியை அந்தந்த பெருநகரங்களின் நகராட்சிகள் வழங்க முடியும் என சொல்லப்பட்டாலும், அரசிடமிருந்து அனுமதி கிடைக்காமல் 50 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்கான அனுமதியை வழங்க முடியாதென “Oslo” மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக, மேற்படி போராட்டத்தை ஒழுங்கமைக்கும் “நோர்வே – ஆபிரிக்க மாணவர் அமைப்பு” சார்பாக பேசிய “Rawha Yohaness” தெரிவித்துள்ளார்.
“Oslo”, “Trondheim” மற்றும் “Bergen” ஆகிய பெருநகரங்களில் 50 பேர் கூடுவதற்கு அனுமதியளிக்கப்படுமென தெரிவித்திருக்கும் காவல்துறை, எனினும் ஒன்றுகூடும் 50 பேரும் “கொரோனா” தொடர்பான சட்டவிதிகளுக்குட்பட்டு, தமக்கிடையில் இடைவெளிகளை பேணுவதை காவல்துறை கடுமையாக கண்காணிக்கும் என தெரிவித்துள்ளது.

இன்றைய சூழ்நிலையில் இன / நிறவெறிக்கெதிரான போராட்டம் முக்கியப்படுத்தப்படவேண்டுமென தெரிவித்திருக்கும் போராட்ட அமைப்பாளர்களும், பொதுமக்களும், “கொரோனா” விதிகளை முன்னிறுத்தி ஒரு தார்மீக ஆதரவுப்போராட்டத்தை மழுங்கடிப்பது கவலைக்குரியதென கருத்துரைத்துள்ளார்கள்.
குறிப்பாக, “கொரோனா” சட்டங்களையும், “50 பேர் மாத்திரம்” என்ற விதியையும் கடுமையாக கடைப்பிடிப்பதாக சொல்லும் காவல்துறை, கடந்த வார இறுதியில் (29, 30, 31 ஜூன்) சீரான காலநிலையில் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக நகரங்களிலும், நீர்நிலைகளிலும் பல நூற்றுக்கணக்கில் கூடியிருந்தபோது, மேற்படி சட்டங்களை அமுல்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, உரிமைப்போராட்டமொன்றுக்கான தார்மீக ஆதரவு வழங்குவதை மேற்படி காரணங்களை சொல்லி தடுப்பது நியாயமாகாதெனவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
