அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு!

You are currently viewing அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு!

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தை, அதிபர் “டிரம்ப்” அவர்களின் ஆதரவாளர்கள் சூழ்ந்துள்ள நிலையில், நாடாளுமன்றவளாகம் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தது.

நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் “ஜோய் பிடென்” வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதை ஏற்றுக்கொள்ள அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்து வந்ததால், இது விடயம் தொடர்பாக அமெரிக்காவெங்கும் பதற்ற நிலை தொடர்ந்த வந்திருந்தது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராய்வதற்கென அமெரிக்க காங்கிரஸ் சபை கூடியதிலிருந்து அங்கு பதட்டமான சூழ்நிலையே நிலவியதும், காங்கிரஸ் சபை கட்டிடத்தை நேற்றிலிருந்து டிரம்ப் ஆதரவாளர்கள் சூழ்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்டட வளாகத்தில், அமெரிக்க அரசியலாளர்கள் இருக்கக்கூடிய பகுதியில் சற்று முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், “Washington” இல் உள்ளூர் நேரப்படி மாலை 18:00 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவை அறிவித்திருக்கும் நகரபிதா, மேலதிக காவல்துறையினரையும் நாடாளுமன்ற வளாகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, இராணுவ உதவியை அமெரிக்க காங்கிரஸ் சபையின் அவைத்தலைவர் “Nancy Pelosi” பாதுகாப்பு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும், எனினும் பாதுகாப்பு அமைச்சகம் அதனை நிராகரித்திருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன.

தற்போது வெளிவந்துள்ள செய்திகளின்படி, அமெரிக்க தேசிய பாதுகாப்புப்படை, “Washington” நகரத்தை பொறுப்பேற்க விரைவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு! 1
அமெரிக்க காங்கிரஸ் சபை மையப்பகுதியில் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள்.

முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை உடைத்து, அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் உட்புகுந்ததாகவும், அங்கு காவலுக்கு நின்ற காவல்துறையினரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ஆதரவாளர்கள், காங்கிரஸ் சபையின் மையப்பகுதிக்குள் புகுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்நுழைந்தவர்கள் குண்டுதுளைக்கதை ஆடைகளை அணிந்திருந்ததோடு, வாயுத்தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விசேட முகமூடிக்கைகளையும் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு! 2
அமெரிக்க காங்கிரஸ் சபையின் உப அதிபர் “Mike Spence” அமரும் ஆசனத்தை கைப்பற்றிய டிரம்ப் ஆதரவாளர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு! 3
அமெரிக்க காங்கிரஸ் சபையின் அவைத்தலைவர் “Nancy Pelosi” அம்மையாரின் அலுவலக ஆசனத்தை கைப்பற்றிய டிரம்ப் ஆதரவாளர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு! 4
காங்கிரஸ் சபையின் மையப்பகுதியில் டிரம்ப் ஆதரவாளர்கள்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு! 5
பாதுகாப்பாக வெளியேற்றப்படும் காங்கிரஸ் சபை உறுப்பினர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு! 6
காங்கிரஸ் சபைக்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்களின் சிலரை தடுத்து வைத்திருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு! 7
காங்கிரஸ் சபை கட்டடத்தின் கதவுகளை உடைக்கும் டிரம்ப் ஆதரவாளர்கள்.

இதேவேளை, “குடியரசுக்கட்சி” யின் தலைமையகத்தில், உருளை வடிவிலான வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், காவல்துறையினர் அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி செயலிழக்க வைத்துள்ளதாகவும் “New York Times” செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம், “ஜனநாயக கட்சி” யின் தலைமையகத்தில் சந்தேகத்துக்கிடமான பொருள் அவதானிக்கப்பட்டதால், அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் “Joy Biden” செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றியபோது, அமெரிக்க ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் டிரம்ப் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, வன்முறையில் யாரும் ஈடுபடவேண்டாமெனவும், நாடாளுமன்ற வளாகத்தில் கூடியிருக்கும் அனைவரையும் அங்கிருந்து திரும்பிச்செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகின் சக்திவாய்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவில் இவ்வாறான நிலை ஏற்பட்டிருப்பதால் அதிர்ச்சியடைந்த உலகநாடுகளின் தலைவர்கள், நடப்பவற்றை கட்டுக்குள் கொண்டுவர அதிபர் டிரம்ப் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென கருத்துரைத்துள்ளனர்.

நோர்வேயின் பிரதமர் “Erna Solberg” அம்மையார், வெளியுறவுத்துறை அமைச்சர் “Ine Eriksen” அம்மையார், எதிர்க்கட்சி தலைவர் “Jonas Gahr Støre”, நேட்டோவின் தலைவர் “Jens Stoltenberg” உள்ளிட்டவர்கள், அமெரிக்க நிலைமைகள் தமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும், நிலைமை ஆபத்தானதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நோர்வேயின் பிரபல அரசியல் ஆய்வாளரொருவர் தெரிவிக்கையில், அமெரிக்காவில் நிலவும் தற்போதைய ஆபத்தான நிலைமைக்கு அதிபர் டிரம்ப் முழுக்கரணமாக அமைகிறாரெனவும், நடந்துகொண்டிருக்கும் நடவடிக்கைகள், அரசை கைப்பற்ற நிகழும் சதி என விளிக்க முடியுமெனவும் கட்டமாக தெரிவித்துள்ளார்.

செய்தி மேம்பாட்டுக்காக காத்திருக்கிறோம்….

23:35 – 06.01.2021

வொஷிங்டன் நகர காவல்துறையின் அறிக்கையின்படி, நாடாளுமன்ற வளாகத்தை ஆக்கிரமித்திருந்த டிரம்ப் ஆதரவாளர்கள், அங்கு கடமையில் நின்ற காவல்துறையினர் மீது இரசாயன திரவங்களை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.

23:50 – 06.01.2021

நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் இன்று, காங்கிரஸ் சபையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவிருந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து கிடைக்கப்பெற்ற இறுதி முடிவுகள் அடங்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை, பாதுகாப்பான இடத்துக்கு முன்னதாகவே நகர்த்திவிட்டதால், மரபு ரீதியாக மிகப்பெறுமானம் வாய்ந்த அவ்வாவணங்கள் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கும் அமெரிக்க காங்கிரசின் செனட்டர் “Jeff Merkley”, கலவரக்காரர்களின் கைகளில் இவை கிடைத்திருந்தால் அவற்றை கலவரக்காரர்கள் எரித்து அழித்திருப்பார்கள் என்றும், அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் மிக மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டிருக்கலாமெனவும் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 538 ஆவணங்களில், 12 ஆவணங்கள் மட்டுமே சபையில் வெளியிடப்பட்டதாகவும், அதற்கிடையில் கலவரக்காரர்கள் சபையில் நுழைந்ததால் ஆவணங்கள் முழுவதுமாக சபையில் வெளியிடப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

00:03 – 07.+1.2021

இந்நிலையில், காங்கிரஸ் சபையினுள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பெண், இறந்துவிட்டதாக “NBC” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏற்க்கெனவே அறிவிக்கப்பட்டபடி, 18:00 மணியிலிருந்து வொஷிங்டன் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வரும் நிலையில், கசங்கிரஸ் சபை துப்பரவு செய்யப்பட்டு மீண்டும் ஒழுங்கு செய்யப்பட்டு, இடைநிறுத்தப்பட்ட சபை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்து, தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணியை தொரடரப்போவதாக காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் விரும்புவதாக “NBC” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள