தாய்வானுக்கு சுமார் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்குவதாக இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்கா அறிவித்திருந்ததையடுத்து, அதற்கு ஏதிர்வினையாக, குறிப்பிட்ட சில அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான தடைகளை சீனா அறிவித்துள்ளது.
“Raytheon” மற்றும் “Boeing” நிறுவனங்களுக்கு எதிரான தடைகளை முதற்கட்டமாக இன்று சீனா அறிவித்துள்ளதாக குறிப்பிடும் “Reuters” செய்தி நிறுவனம், தாய்வானுக்கு அமெரிக்கா நேரடியாக ஆயுத உதவிகளை வழங்குவது தொடர்பாக சீனா அமெரிக்காவை பலமுறை எச்சரித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. சீனாவின் தொடர் எச்சரிக்கைகளை உதாசீனம் செய்வதோடு, தாய்வான் விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் சீனாவை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொள்ளுமானால் சீன – அமெரிக்க உறவுகளில் விரிசல்கள் ஏற்படுவதோடு, தாய்வான் பிராந்தியத்தில் அமைதியின்மையும் ஏற்படுவதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டுமென சீனா தெரிவித்துள்ளதாக மேலும் குறிப்பிடும் “Reuters” செய்தி நிறுவனம், சர்ச்சைக்குரிய விதத்தில் தாய்வானுக்கு வருகை தந்திருந்த அமெரிக்க காங்கிரஸ் தலைவர் “Nancy Pelosi” அம்மையாருக்கு எதிராகவும் சீனா தடைகளை விதித்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.