நோர்வே உற்பத்தி செய்யும் ஆயுதங்களை அமெரிக்கா ஊடாக, அமெரிக்க ஆயுதங்கள் என்ற போர்வையில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதற்கான இரகசிய உடன்பாடொன்று அமெரிக்காவுக்கும், நோர்வேக்குமிடையில் செய்துகொள்ளப்பட்டிருப்பதாக நோர்வேயின் நாளிதழ்களில் ஒன்றான “Dagbladet” தகவல் வெளியிட்டுள்ளது.
மிக இரகசியமாக இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடும் “Dagbladet” நாளிதழ், நோர்வேயின் ஆயுதங்களை அமெரிக்க ஆயுதங்கள் என்ற போர்வையில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டமிடலில் நோர்வேயின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவையும் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அம்பலப்படுத்துகிறது.
நோர்வே உற்பத்தி செய்யும் ஆயுதங்களை நோர்வேயே நேரடியாக சர்வதேச சந்தையில் சந்தைப்படுத்த முடியாதா என எழும் கேள்விக்கான சிறு விளக்கம்….
நோர்வேயின் கொள்கையின்படி, மனிதவுரிமைகளுக்கு மதிப்பு கொடுக்காத நாடுகளுக்கும், குறிப்பாக மத்தியகிழக்கு நாடுகளுக்கும், உள்நாட்டு – வெளிநாட்டு போர்ச்சூழலில் சிக்குண்டிருக்கும் நாடுகளுக்கும், போர்க்குற்றங்களுக்கு உள்ளான நாடுகளுக்கும் தனது ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை அல்லது, தனது ஆயுதங்கள் இந்த நாடுகளுக்கு கிடைக்கக்கூடாது என்பதை நோர்வே ஒரு விதியாகவே கடைப்பிடித்து வந்திருக்கிறது. இதுவே, பரந்தளவில், வெளிப்படையான சர்வதேச ஆயுத விற்பனையை நோர்வே பகிரங்கமாக மேற்கொள்ளாமல் இருப்பதற்கு காரணமாக இருந்து வந்துள்ளது.
இப்போது, தனது ஆயுதங்களை அமெரிக்க ஆயுதங்கள் என்ற போர்வையில் சர்வதேச சந்தையில் சந்தைப்படுத்தும்போது, நோர்வேயின் ஆயுதக்கொள்கைக்கு பங்கமேதும் ஏற்படாது என்பது ஒருபுறமிருக்க, இவ்விதத்தில் விற்பனை செய்யப்படும் நேர்வேயின் ஆயுதங்கள், மனிதவுரிமைகளுக்கு மதிப்பு கொடுக்காத நாடுகளுக்கும், குறிப்பாக மத்தியகிழக்கு நாடுகளுக்கும், உள்நாட்டு – வெளிநாட்டு போர்ச்சூழலில் சிக்குண்டிருக்கும் நாடுகளுக்கும், போர்க்குற்றங்களுக்கு உள்ளான நாடுகளுக்கும் தாராளமாக கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதோடு, ஆயுத விற்பனைமூலம் பெரும் பொருளாதாரத்தையும் நோர்வேயும், அமெரிக்காவும் ஈட்டிக்கொள்ள முடியும் என்பது இங்கு பிரதானமாக கவனிக்கத்தக்கது.
அமெரிக்காவை பொறுத்தவரை, அமெரிக்க ஆயுதங்களை அதிகளவில் வாங்கிக்குவிக்கும் நாடாக மத்தியகிழக்கின் சவூதி அரேபியாவே இருக்கிறது. எனினும், நோர்வேயின் கொள்கையின்படி, சவூதி அரேபியா மனிதவுரிமைகளை மதிக்காத நாடுகளின் பட்டியலில் இருப்பதால் நோர்வேயின் ஆயுதங்கள் சவூதிக்கு விற்பனை செய்யப்படுவதில்லை. எனினும், புதிய இரகசிய உடன்பாட்டின்படி, நோர்வேயின் ஆயுதங்கள், அமெரிக்க போர்வையில் சவூதிக்கு தாராளமாக விற்கப்பட வழிவகை செய்யப்படுகிறது.
மேற்படி இரகசிய உடன்பாடு குறித்து மேலும் அம்பலப்படுத்தும் “Dagbladet” நாளிதழ், இவ்விரகசிய உடன்பாட்டுக்கான அடித்தளம் 2020 ஆம் ஆண்டில், குறிப்பாக உலகமே “கொரோனா” பெருந்தொற்றில் அல்லாடிக்கொண்டிருந்த அதே நேரத்தில் கமுக்கமாக ஆரம்பிக்கப்பட்டதாகவும், நோர்வேயின் ஆயுத தளபாடங்கள் தொடர்பில் அனைத்து முடிவுகளையும் எடுக்கக்கூடிய, நோர்வே பாதுகாப்புத்துறையை சேர்ந்த இயக்குனரான “Morten Tiller”, இது விடயமாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான “பென்டகன்” இற்கு 2020 ஆம் ஆண்டில் எழுதிய கடிதமொன்றில், நோர்வேயால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்கா வசம் இருக்கும் ஆயுதங்களை, அமெரிக்கா தவிர்ந்த மூன்றாவது நாடொன்றுக்கு விற்பனை செய்வது தொடர்பிலான வழிவகைகளை ஆராய்வதற்கு நோர்வே பாதுகாப்புத்துறை விரும்புகிறது என்றும், அமெரிக்கா ஊடாக, மூன்றாவது கைகளுக்கு நோர்வேயின் ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுமானால், நோர்வீஜிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அந்த வாய்ப்பை அங்கீகரிக்க நோர்வே தயாராகவே இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் “Dagbladet” நாளிதழ் மேலும் அம்பலப்படுத்துகிறது.
மேற்படி இரகசிய உடன்பாடுகுறித்த கேள்விகளை, அமெரிக்க மற்றும் நோர்வே தரப்புக்களிடம் தொடுத்திருந்த “Dagbladet” நாளிதழுக்கு, ராஜதந்திர முறையில் கையாளப்படும் விடயங்கள் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லையென இரு நாடுகளும் சொல்லிவைத்தாற்போல் ஒரே பதிலை வழங்கியிருக்கின்றன. நோர்வேயின் ஆயுத உற்பத்தி தொழிநுட்பம் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்று வருவதால், நோர்வேயின் ஆயுதங்களுக்கு சர்வதேச கோரல்கள் அதிகரித்திருப்பதாக நோர்வே வெளியுறவுத்துறை சமகாலத்தில் தெரிவித்திருப்பதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
மேற்படி அமெரிக்காவுக்கும், நோர்வேக்குமான இரகசிய உடன்பாட்டின் மூலம் நோர்வேயின் ஆயுதங்கள் அமெரிக்க போர்வையில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் நிலை வரும்போது, நோர்வேயின் பெயர் வெளிப்படுத்தப்படாது என்றாலும், நோர்வேயை பொறுத்தளவில், உள்நாட்டில் அரசியல் ரீதியாகவும், சர்வதேச சட்டநியமங்கள் உள்ளிட்ட விடயங்களிலும் பெரும் சிக்கல்களுக்கு நோர்வே முகம் கொடுக்கவேண்டி வருமென நோர்வே ஆய்வாளரான “Cecilie Hellestveit” குறிப்பிடுகிறார்.
தனது ஆயுத ஏற்றுமதிகள் விடயத்தில், மனிதவுரிமைகளுக்கு மதிப்பு கொடுக்காத நாடுகளுக்கும், குறிப்பாக மத்தியகிழக்கு நாடுகளுக்கும், உள்நாட்டு – வெளிநாட்டு போர்ச்சூழலில் சிக்குண்டிருக்கும் நாடுகளுக்கும், போர்க்குற்றங்களுக்கு உள்ளான நாடுகளுக்கும் தனது ஆயுதங்களை விற்பதில்லை என்பதை நோர்வே கொள்கையாக வைத்திருப்பதாக சொல்லிக்கொண்டாலும், உக்ரைன் விவகாரத்தில், போர்ச்சூழலில் சிக்கியிருக்கும் உக்ரைனுக்கு இராணுவத்தளபாடங்களை வழங்கியதன் மூலம் தனது கொள்கையை அப்பட்டமாக மீறியிருந்தது; அதுவும், அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க, 1959 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலிருக்கும் ஆயுதக்கொள்கை மீறப்பட்டு உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது தவிரவும், “Jemen” நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டிருக்கும் சவூதி அரேபியா, அங்கு பாரிய மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என, ஐக்கியநாடுகள் சபையும், சர்வதேச மன்னிப்புச்சபையும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமெரிக்கா ஊடாக நோர்வேயின் ஆயுதங்கள் சவூதிக்கு விற்பனை செய்யப்படுவதை நோர்வே அனுமதிக்க தயாராகிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒருபுறம், மனிதவுரிமைகளுக்கு மதிப்பு கொடுப்பதோடு, உலக சமாதானத்துக்கு பாடுபடும் சமாதானப்புறாவாக தன்னை காட்டிக்கொள்ள அரும்பாடுபடும் நோர்வே, மறுபுறத்தில், தனது பெயர் வெளியே தெரியாத முறையில் அமெரிக்கா ஊடாக, உலக சமாதானத்துக்கு பெரும் குந்தகமாக இருக்கும் ஆயுதங்களை உலகம் முழுவதும் விற்பனை செய்து பொருளீட்ட முனைகிறது. இது இரட்டை நிலைப்பாடல்ல என நிறுவும் முயற்சியில் நோர்வே விரைவில் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.
மூலம்: https://borsen.dagbladet.no/nyheter/norges-nye-vapenpakt-med-usa/76419419