உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், பல மில்லியன் அமெரிக்க வாக்காளர்களுக்கு அழைப்புக்களை மேற்கொண்ட மர்ம தானியங்கி தொலைபேசி அழைப்பு தொடர்பில் அமெரிக்க “FBI” விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
வாக்காளர்களுக்கு அழைப்புக்களை மேற்கொண்ட மர்ம தானியங்கி தொலைபேசி அழைப்பு, வாக்காளர்களை பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தியிருந்ததாகவும், இதன்மூலமாக வாக்களிப்பின் விகிதாசாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக “FBI” கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
இதேவேளை, வாக்கு சாவடிகளில் சனக்கூட்டம் காணப்படுவதால், வாக்களிக்க விரும்புபவர்கள் நாளைவரை காத்திருக்கும் படியும் தொலைபேசி அழைப்புக்கள் அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் “Donald Trump” வெற்றி பெற்றதில் ரஷ்ய உளவுத்துறையின் பாரிய பங்களிப்பு இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அது உண்மையே என 4 வருடங்கள் நடைபெற்ற விசாரணைகளின் இறுதியில் தெரிவிக்கப்பட்டதும், தற்போதைய அதிபர் தேர்தலிலும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க ரஷ்ய மற்றும் ஈரானிய உளவுத்துறைகள் முயல்வதாகவும் அமெரிக்க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வாக்களிப்பு நாளான இன்று காலை வரை, எந்தவிதமான இணையவழி ஊடறுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்திருந்த அமெரிக்க தரப்பு, இப்போது இந்த மர்ம தானியங்கி தொலைபேசி அழைப்பு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.