இந்திய மற்றும் இலங்கை இராணுவங்களுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி இன்றையதினம் அம்பாறையில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கூட்டு இராணுவ பயிற்சிக்கு மித்ர சக்தி என இ பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், அடுத்துவரும் 12 நாட்களுக்கு இந்த கூட்டு பயிற்சி இடம்பெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ளவுள்ள இந்திய இராணுவத்தினர் 120 பேரை ஏற்றிய விசேட விமானம், மத்தளை சர்வதேச விமான நிலையத்தை நேற்று முன்தினம் வந்தடைந்தது.
கேர்ணல் பிரகாஷ் குமாரின் தலைமையில் இந்திய இராணுவம் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளது.
53 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, இந்த பயிற்சியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் விஜயபாஹூ படையணியுடன் அம்பாறை போர்ப்பயிற்சி பாடசாலையில் இந்த பயிற்சி இடம்பெறவுள்ளது.
இதற்கமைய, COVID ஒழிப்பு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, Bio-Bubble முறைமையில் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பயிற்சியின் போது கலகத்தடுப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இருதரப்பு அனுபவங்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளதுடன், உள்ளக செயற்பாடுகளும் மேம்படுத்தப்படவுள்ளன.