அம்பிகை அம்மையார் தன்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அது பெரு வெற்றி என்றும் குறிப்பிடுகின்ற அம்சம் முற்றுமுழுதாக மனித உரிமைகள் பேரவைக்குள் தமிழர் விவகாரத்தை முடக்கும் தன்மை கொண்டது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
அம்பிகை அம்மையானரின் அறிவிப்புத் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர் கஜேந்திரகுமாரினால் முன்னெடுக்கப்பட்டது.
பேரவையால் ஒரு பிரியோசனமும் இல்லை பொறுப்புக்கூறல் விடயத்தினை பேரவையிலிருந்து வெளியே எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக்கொண்டது.
அம்பிகை அம்மையார் போராட்டத்தின் முடிவில் சொல்லியிருக்கின்ற விடயங்கள் கடும் ஏமாற்றம் அளிப்பவையாக அமைந்திருக்கின்றன.
எங்களுக்கு ஒரு பலத்த சந்தேகம் உள்ளது. அம்மையானர் ஒரு நேர்மையானவர், மக்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் என்பதற்காக மக்களுடைய உணர்வுகளைப் பயன்படுத்தி அவருடைய நோக்கத்தைப் பலப்படுத்துவதாகக் காட்டிக்கொண்டு அவரைச் சுற்றியிருந்தவர்கள் படுமோசமான ஒரு துரோகத்தை இனத்துக்குச் செய்துவிட்டார்கள் என்ற ஒரு கருத்தைச் சொல்லவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளுள்ளோம்.
பேரவையின் ஆரம்ப அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் கடும் ஏமாற்றமளிப்பவையாக உள்ளன எனத் தெரிவித்து தான் அம்பிகை போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால் போராட்டத்தை முடிக்கின்றபோது தன்னுடைய நான்கு கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படுவதாகத் தெரிவித்து IIIM என்கின்ற கோரிக்கையை சுட்டிக்காட்டுகின்றார்.
குறித்த விடயம் பேரவைக்கு தற்போது சமர்பிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதனை வரவேற்று அதனை ஒரு பெரும் வெற்றி என்று தெரிவித்துள்ளதுடன், இரண்டாவது அம்சமாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரே ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை தனது கோரிக்கையில் அரைவாசி நிறைவேற்றப்படுவதாகத் தெரிவிக்கின்றார்.
இது எம்மைப்பொறுத்தவரையில் மிகப்பெரிய ஏமாற்றமாகும். IIIM என்ற விடயம் இந்த மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. சிரியாவில் உள்ள IIIM என்ற விடயம் பாதுகாப்புச் சபையின் கீழ் உள்ள மிகக் காத்திரமானதாகக் காணப்படுகின்றது.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் குறித்த IIIM என்ற விடயம் பேரவைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்கு கால நிர்ணயம் இல்லாத நிலையில் மிகப் பலவீனமாக ஒரு கட்டமைப்புக்குள் முடக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழர்களுடைய விவகாரத்தை தொடர்ந்தும் எந்தவித எல்லையும் இல்லாமல் ஒரு அதிகாரமும் இல்லாத மனித உரிமைகள் பேரவைக்குள்ளே நிரந்தரமாக முடக்கவைத்திருப்பதற்குரிய ஒரு சரத்தாகவே இறுதியாக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையைப் பார்க்கின்றோம் என்று தெரிவித்துள்ள கஜேந்திரகுமார் அம்பிகை அம்மையானரின் அறிவிப்பு தமிழ் மக்களை ஏமாற்றும் அவர்களுக்கு துரோகமிழைக்கும் நடவடிக்கையாகும் என்று தெரிவித்தார்.