தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவின் அழுத்தத்தினை வலியுறுத்தி ஒருமித்த கோரிக்கையை முன்வைப்பதற்கு எதிர்தரப்பிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் முதற்கட்டமாக ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளன. இந்த ஒற்றுமையை மேலும் ஸ்திரப்படுத்திய பின்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினை ஆதரிக்கும் ஆளுந்தரப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாகவுள்ள அரசியல் தீர்வு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்தியாவின் தலையீடு அவசியம் என்பதை மையப்படுத்தி கடந்த நவம்பர் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள் கூடி விசேட கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தன.
அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமைகொழும்பு – வெள்ளவத்தையிலுள்ள குளோபல் டவர் ஹோட்டலில் இரண்டாவது கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ், புளொட், தமிழ் மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டிருந்தன.
எவ்வாறிருப்பினும் இவை அனைத்தும் எதிர்தரப்பிலுள்ள கட்சிகளாகும். எனவே இந்த கலந்துரையாடலுக்கு 13 ஐ ஆதரிக்கின்ற ஆளுந்தரப்பின் தமிழ் கட்சிகளுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று வினவியபோதே செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்தார்.
‘ஆரம்பத்தில் எமது கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும். எமக்குள் பரஸ்பம், ஒற்றுமை என்பன உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே 13 ஐ ஆதரிக்கின்ற தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதற்கான யோசனை காணப்படுகிறது. எனினும் எமக்குள்ளான ஒற்றுமை மேலும் கட்டியெழுப்பப்பட்ட பின்னர் அதனை செய்ய முடியும்.
இவ்வாறு தமிழ் கட்சிகளை ஆதரித்து அதற்கான செய்ற்றிட்டங்களை முன்னெடுப்போம். அதன் பின்னர் 13 ஐ ஆதரிக்கக் கூடியதும், அதிகாரங்களை வழங்கக் கூடிய சிங்கள கட்சிகளின் ஆதரவு கோரப்படும். எனினும் அவற்றை எம்முடன் இணைந்துக் கொண்டு செயற்பட முடியாது’ என்றார்.