உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபிக்கும் முயற்சியில் நாம் அரசாங்கத்துக்கோ பாதிக்கப்பட்ட தரப்பினருக்கோ அல்லது அதன் பிரதிநிதிகளுக்கோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என்று ஜப்பான், தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, சுவிட்சர்லாந்து தூதுவர் சிரி வொல்ட் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் ஷால்க் ஆகியோருக்கும் தமிழ் கட்சிகளின் வடமாhகணத்தைச் சேர்ந்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் இரவு யாழில் உள்ள தனியார் விடுதியில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்ட மேற்படி மூன்று நாடுகளின் இராஜதந்திரிகளும் ஈற்றில் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினார்கள். இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்கள் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எம்முடனான கலந்துரையாடல்களில் இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் நாம் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றோம். எம்முடனான கலந்துரையாடல்களின்போது சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை நாம் அரசாங்கத்திடம் அவ்வாறே குறிப்பிடவுள்ளோம். அவ்விடயங்களுக்கான தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும், எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்துவோம்.
அதேபோன்று, அரசாங்கம் சார்பில் தெரிவிக்கும் விடயங்களையும் நாம் ஏனைய தரப்பினருக்கு எடுத்துரைப்போம். அதனைத் தவிர்த்து நாம் எந்தவொரு தரப்பினருக்கும் அழுத்தங்களை பிரயோகிக்கப்போவதில்லை.
எம்மைப்பொறுத்தவரையில், உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளோம். விசேடமாக எமக்கு காணப்படுகின்ற முன் அனுபங்கள் விசேடமாக நிலைமைகளை கையாண்ட சூழல்கள் ஆகியவற்றை நாம் பகிர்ந்து கொள்வதற்கு தயாராகவுள்ளோம்.
மேலும் தங்களால் (தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால்) குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் சம்பந்தமாக அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அது உள்நாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயமாகும். அதில் நாம் தலையீடுகளைச் செய்யப்போவதில்லை.
இதனைவிடவும், பாதிக்கப்பட்ட மக்களின் உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக நாம் தொடர்ச்சியான பங்களிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம் என்றனர்.