அராலியில் தாயையும், 13 வயது மகனையும் கொடூரமாக தாக்கிய நபர் கைது!

You are currently viewing அராலியில் தாயையும், 13 வயது மகனையும் கொடூரமாக தாக்கிய நபர் கைது!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் தாயையும், தாயின் 13 வயது மகனையும் கொடூரமாக தாக்கிய நபர் ஒருவர் வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறையினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கணவனை பிரிந்த குறித்த தாயும் மகனும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இதன்போது பளை பகுதியை சேர்ந்த சந்தேகநபர் அராலி பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு வந்திருந்தபோது, அவருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அங்கு தங்கியிருந்த சில மாதங்களின் பின்னர் அந்த வீட்டினை தனது பெயருக்கு எழுதி தருமாறு கூறி குறித்த பெண் மீதும், குறித்த பெண்ணின் மகனான சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தி வந்துள்ளார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது தாக்குதலினால் அந்த பெண்ணுக்கு தலையில் பாதிப்பு ஏற்பட்டு மனநலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்திய சந்தேகநபர் தனது தாக்குதல் மூலமே அந்த பெண்ணுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அயல்வீட்டாருக்கு கூறியுள்ளார்.

அதன்பின்னர் அந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவேளை சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தி, சிறுவனை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுவன் வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த வேளை, அந்த சிறுவனை மல்லாகம் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தினர்.

இதன்போது, அந்த சிறுவனை சிறுவர் இல்லத்தில் சேர்ப்பிக்குமாறும், சந்தேகநபரை கைது செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்தவகையில் பளை பகுதியில் தலைமறைவாகி இருந்த குறித்த நபர் மீண்டும் இன்றையதினம் அராலி பகுதிக்கு வந்திருந்தவேளை வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறையினர் அவரை கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது அவர் ஐந்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply