அலரி மாளிகையை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பெரும் திரளான மக்கள் விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கைகளில் சிறீலங்கா தேசியக் கொடிகளுடன் வீதி தடை கம்பங்களில் மேல் ஏறி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, அலரி மாளிகைக்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. அரசுக்கு எதிராகக் கொதிப்படைந்த மக்கள் போடப்பட்டிருந்த இரும்பு வீதி தடைகளைத் தகர்த்து முன்னோக்கி நகர முயற்சித்த போது, அதனை தடுக்கும் வகையில் மேலும் பல பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், எனக்கு எதிராக உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளால் களமிறக்கப்பட்ட சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரைத் தோற்கடித்து 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆணையுடன் நான் ஆட்சிப்பீடம் ஏறினேன்.
தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது ஜனாதிபதிப் பதவிக்குரிய காலம் வரை நான் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன்.
நாடாளுமன்றத்திலும் எனக்கு எதிராக மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை கொண்டுவருவதற்குரிய பலம் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.
அன்று எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட இருவரும் (சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க) இன்று எனக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களின் கட்சிகளின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களுமே எனக்கு எதிராக வீதிகளில் பொங்குகின்றனர்.
‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் அரசியலே உண்டு என்பதை நாடாளுமன்றத்தில் இந்த வாரம் எதிரணியினர் நடத்திய போராட்டங்களும் பகிரங்கப்படுத்தியுள்ளன.
எனவே, நாட்டில் எனக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் உண்மையில் மக்கள் போராட்டங்கள் அல்ல” – என்றார்.