அலாஸ்காவில் மாயமான அலாஸ்கா விமானம் சடலங்களுடன் கண்டுபிடிப்பு !

You are currently viewing அலாஸ்காவில் மாயமான அலாஸ்கா விமானம் சடலங்களுடன் கண்டுபிடிப்பு !

அலாஸ்காவில் 10 பேருடன் காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த 10 பேரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. விமானத்திற்குள் மூன்று நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஞ்சிய ஏழு பேரும் விமானத்திற்குள் சடலமாக இருப்பதாகவே நம்பப்படுகிறது, ஆனால் விமானத்தின் மோசமான நிலை காரணமாக தற்போது அவர்களை அணுக முடியவில்லை என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

நோமிலிருந்து தென்கிழக்கே சுமார் 34 மைல்கள் தொலைவில் விமானம் விபத்தில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் கண்டுபிடிக்கப்பட்டு, மூன்று சடலங்களை மீட்டுள்ளதாக உறுதி செய்த USCG, இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல்களை பதிவு செய்வதாக குறிப்பிட்டுள்ளது.

CNN செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், பெரிங் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் செஸ்னா விமானம், ஒன்பது பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன், வியாழக்கிழமை உனலக்லீட்டில் இருந்து நோம் நோக்கி பயணித்த நிலையில் காணாமல் போனது.

விமானம் மாயமான தகவலை அடுத்து களமிறங்கிய மீட்பு குழுவினர், மோசமான வானிலை மற்றும் குறைந்த பார்வைநிலை காரணமாக பல மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு விமானத்தை கண்டுபிடித்தனர்.

மீட்பு குழுவினர் நோம் முதல் டாப்காக் வரை தரைவழி தேடல்களை மேற்கொண்டனர், அதேவேளை அமெரிக்க கடலோர காவல்படை விமானக் குழுவினர் வான்வெளியில் இருந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை, பார்வைநிலை சிறப்பாகவும், வானம் தெளிவாகவும் இருந்ததை அடுத்து, ​​தேசிய காவல்படை மற்றும் கடலோர காவல்படை ஹெலிகொப்டர் தேடல் குழுக்களை களமிறக்கினர்.

இதனையடுத்து, நோம் நகரிலிருந்து தென்கிழக்கே 34 மைல் தொலைவில் விபத்தில் சிக்கிய நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் யார் யார் பயணித்தார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை,

ஆனால் பயணிகளின் அனைத்து குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நோம் தன்னார்வ தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply