அழிக்கப்பட்ட அறிவுச் சுரங்கம் “யாழ் நூலகம்”

You are currently viewing அழிக்கப்பட்ட அறிவுச் சுரங்கம் “யாழ் நூலகம்”

தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகளை அழிப்பது தமிழர்களை அழிப்பதைக் காட்டிலும் முக்கியமானது – சிங்கள இனவெறியர்களுக்குச் சொல்லித் தரப்பட்ட சித்தாந்தங்களுள் இதுவும் ஒன்று. அத்தகைய கலாச்சாரக் குறியீடுகளுள் ஒன்று யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம். ஆசியாவின் மிகச்சிறந்த நூலகமாகக் கருதப்பட்ட நூலகம். ஈழத் தமிழர்களின் பெருமை, பெருமிதம், கௌரவம் என்று யாழ் நூலகத்தைச் சொல்லலாம்.

இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்களின் கல்வியறிவுக்கான ஆதாரப்புள்ளியாக அந்த நூலகத்தைத்தான் சுட்டிக்காட்டுவார்கள். அதுதான் சிங்கள இனவெறியர்களை உறுத்திக்கொண்டே இருந்தது. தமிழர்களின் முன்னேற்றத்துக்கு உத்வேகம் கொடுக்கின்ற அந்த நூலகத்தை என்றாவது ஒருநாள் தடம் தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள் வன்மம் வளர்த்துக் கொண்டிருந்தனர். தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தனர்.

1981 ஆம் ஆண்டின் மே மாதம் யாழ்ப்பாணத்தில் மாவட்ட சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. பிரசாரம் உச்சத்தில் இருந்தது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிங்களக் காவலர்கள் வந்திருந்தனர்.

31 மே 1981 அன்று தமிழர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சிங்கள காவலர் ஒருவர் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாது. எப்படி வந்தார்கள் என்று தெரியாது. கொத்துக் கொத்தாக வந்த சிங்களர்கள் தமிழர்கள் மீது ஆவேசத் தாக்குதலில் ஈடுபட்டனர். இங்கே சிங்களர்கள் என்றால் சிங்களக் காவலர்கள், ராணுவத்தினர், இனவெறியர்கள், வன்முறையாளர்கள் என்று அத்தனை பேரும் அடக்கம்.

முதலில் புத்தகக் கடைகளைக் குறிவைத்தனர். அடுத்தது, பத்திரிகை அலுவலகம். இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமைக்குரிய ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையானது. யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலுக்குத் தீவைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது. அவருடைய வாகனமும் எரிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தின் தென்பட்ட தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அனைத்தையும் நெருப்பு கொண்டு எரித்தனர்.

அழிக்கப்பட்ட அறிவுச் சுரங்கம் “யாழ் நூலகம்” 1

அதன்பிறகும் வெறி அடங்கவில்லை அவர்களுக்கு. அடுத்து எதை அழிப்பது என்று அலைந்த இனவெறியர்களின் கழுகுக் கண்களில் யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம் சிக்கியது. உற்சாகமடைந்த இனவெறியர்கள் யாழ் நூலகத்துக்குள் நுழைந்தனர். தடுத்து நிறுத்திய காவலாளியை நெட்டித் தள்ளினர். கைவசம் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துப் பார்த்துத் தீவைத்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் சில சாட்சியங்கள் இருக்கின்றன.

நூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின. நூலகம் எரிகிறது என்றால் புத்தகங்கள் எரிகின்றன என்று அர்த்தம். புத்தகங்கள் எரிகின்றன என்றால் தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகள் எரிகின்றன என்று அர்த்தம். செய்தி கேள்விப்பட்ட தமிழர்கள் பதைபதைத்தனர்.

நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்களைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தினர் சிங்கள காவலர்கள். மேலிடத்து உத்தரவு அவர்களை அப்படிச் செய்யவைத்திருந்தது.

நூலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் அழிந்துகொண்டிருந்தது. நூலகத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97000 நூல்கள் கருகிச் சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின. கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன பொக்கிஷங்களில் அதிமுக்கியமானவை.

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பன்மொழிப் புலவர் தாவீது அடிகளார் அதிர்ச்சியில் மரணம் அடையும் அளவுக்கு இருந்தது யாழ் நூலக எரிப்பின் தாக்கம். நூலக எரிப்பை நேரடியாகப் பார்த்த பற்குணம் என்பவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. யாழ் நூலக எரிப்பு தமிழர்களின் மனத்தில் ஆற்றமுடியாத வடுக்களை ஏற்படுத்திவிட்டன. அந்த நூலகம் உருவான வரலாறு அப்படிப்பட்டது.

மனிதனுக்கு சுவாசிப்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியமானது வாசிப்பது என்பதில் ஈழத்தமிழர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்கள். அதன் காரணமாகவே 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முதல் நூலகம் உருவாக்கப்பட்டது. அந்த நூலகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையாவிட்டாலும்கூட புத்தகங்கள் வாசிப்பதில் தமிழர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடவில்லை. அதன் காரணமாகவே பெரிய நூலகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உருவாக்க விரும்பினர்.

ஆர்வம் கொண்ட இளைஞர்களும் பொதுநல ஆர்வலர்களும் நூலகம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிய அளவில் கட்டப்பட்ட அந்த நூலகம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது. பொதுமக்களிடம் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டே நூலகக் கட்டடம் வளரத் தொடங்கியது. நூலகத்தை நிர்மாணிக்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் நரசிம்மன் ஈடுபட்டார். அமைதியான வாசிப்புக்குத் தேவையான அத்தனை வசதிகளுடனும் கூடிய யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகம் 11 அக்டோபர் 1959 அன்று வாசிப்புக்குத் திறந்துவிடப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூல்கள் வந்துசேர்ந்தன. புத்தக ஆர்வலர்கள் சேமித்துவைத்திருந்த புத்தகங்களும் பத்திரிகைப் பிரதிகளும் யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன. அரிய நூல்களும் ஆவணங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டன. தமிழ் இளைஞர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கு யாழ் நூலகம் பேருதவி செய்தது.

அழிக்கப்பட்ட அறிவுச் சுரங்கம் “யாழ் நூலகம்” 2

ஏராளமான இளைஞர்கள் நூலகத்துக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வாசிப்பது தமிழர்களின் தினசரி நடவடிக்கைகளுள் ஒன்றாக மாறிப்போனது யாழ் நூலகத்தின் வருகைக்குப் பிறகுதான். யாழ் நூலகத்தைப் பார்த்து பரவசம் அடைந்த தமிழ் இளைஞர்கள், அதேபோன்று இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான நூலகங்களையும் வாசக சாலைகளையும் தத்தமது பகுதிகளில் உருவாக்க ஆர்வம் செலுத்தினர்.

தமிழர்களின் வாசிப்பு ஆர்வமும் கல்வியறிவும் சிங்கள அரசாங்கத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தன. தமிழர்கள் படிப்பதால்தான் சிந்திக்கிறார்கள். சிந்திப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள். போராட்டத்தில் இறங்குகிறார்கள். உரிமைக்குரல் எழுப்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவர்களுடைய கல்வியறிவு. அதற்கு உந்துசக்தியாக இருப்பது அந்த யாழ் நூலகம். அதை அழித்துவிட்டால் தமிழர்களின் எதிர்காலத்தையே சீர்குலைத்துவிடமுடியும் என்று கணித்தனர்.

நூலகத்தை எரிக்கும் பொறுப்பு இரண்டு அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறில் மேத்யூ மற்றும் காமினி திசநாயகா என்ற இரண்டு அமைச்சர்கள் களத்தில் இறங்கினார்கள். (பின்னாளில் அதிபரான ரணசிங்கே பிரேமதாசா கொடுத்த வாக்குமூலம் இது) கொழும்புவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள வன்முறையாளர்களை யாழ்ப்பாணம் நகரத்துக்கு அழைத்துவந்து தங்கவைத்தனர். என்ன செய்வீர்கள் என்று தெரியாது.. யாழ் நூலகம் எரிக்கப்படவேண்டும். இதுதான் அந்த வன்முறையாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த உத்தரவு.

தகுந்த தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தனர் வன்முறையாளர்கள். அந்த நேரம் பார்த்து போலீஸாருக்கும் தமிழர்களுக்கும் மோதல் மூண்டது. இதுதான் சமயம் என்று மின்னல் வேகத்தில் களமிறங்கினர் வன்முறையாளர்கள். அமைச்சர் இட்ட உத்தரவை அப்படியே நிறைவேற்றி முடித்தனர்.

நூலகத்தை எரித்த நெருப்பு தமிழர்களின் நெஞ்சுக்குள் பரவியது. தங்களுடைய உரிமைக்குரலை உரத்து எழுப்பியது நூலக எரிப்புப் பிறகு என்றே சொல்லலாம். பாவத்துக்குப் பரிகாரம் தேடும் முயற்சியாக யாழ் நூலகத்தை மீண்டும் கட்டியிருக்கிறது சிங்கள அரசு. செங்கல். சிமெண்ட். மேசை. நாற்காலி. எல்லாம் புதிதாக வந்துவிட்டன, அழிந்துபோன அரிய ஆவணங்களைத் தவிர!

-ஆர். முத்துக்குமார்.

பகிர்ந்துகொள்ள