அவதூறே பணியாக…! IBC தமிழ் குழுமம்…!!

You are currently viewing அவதூறே பணியாக…! IBC தமிழ் குழுமம்…!!

தமிழ்த்தேசிய அரசியல் பாதையில் விட்டுக்கொடுப்பில்லாத உறுதியோடு பயணிக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பரப்புரை செயலாளரும், கட்சியின் சட்ட ஆலோசகருமான திரு. நடராஜர் காண்டீபன் சொல்லாத ஒன்றை சொன்னாரென நிறுவுவதற்காக, IBC தமிழ் குழுமமும், அதன் பொருளாதார ஆதரவில் இயங்கும் வேறும் சில இணையங்களும், “ஆய்வாளர்கள்” என தங்களை தாங்களே அழைத்துக்கொள்பவர்களும் ஒன்றாக கூட்டிணைக்கப்பட்டு செயலாற்ற பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டு வருவதை காண முடிகிறது.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலிருந்து முழங்கும் தமிழ்த்தேசிய வானொலியான “தமிழ்முரசம்” வானொலி, “தமிழ்த்தேசிய அரசியலும், தமிழ் ஊடகங்களின் வகிபாகமும்” என்ற தலைப்பில் ஒழுங்கமைத்திருந்த Zoom, மெய்நிகர் காணொளியூடான அமர்வொன்றில் சிறப்பு கருத்துரையாளராக கலந்துகொண்ட திரு. நடராஜர் காண்டீபன், சமகாலத்தில் நடைபெறும் தமிழ்மக்களின் உரிமை சார்ந்த சனநாயக போராட்டங்களின்போது, தமிழ்த்தேசிய ஊடகங்கள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் தரப்புக்கள், எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றிய தனது கருத்துக்களை வெளிப்படுத்தி பேசியிருந்தார். அதன்போது, முன்னாள் போராளிகளிகளுக்கு யாரும் உதவக்கூடாது என திரு. நடராஜர் காண்டீபன் சொன்னதாக, அவர் சொல்லாத ஒன்றை பரப்புரை செய்து, மேற்படி IBC குழுமம், இதற்கான எவ்விதமான ஆதாரத்தையும் முன்வைக்காமல், வெறுமனே திரு. நடராஜர் காண்டீபன் மீதும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மீதும் அவதூறுகளை பரப்புவதையே இன்றும் தொடர்கின்றது. 

சுமார் மூன்று மணிநேரம் நடந்த கருத்தமர்வில் எங்காவது ஓரிடத்தில் முன்னாள் போராளிகளுக்கு யாரும் உதவக்கூடாது என்று சொல்லப்பட்டதா என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டிய கடப்பாடு, குறித்த குழுமத்துக்கு உள்ளது. இதை ஒரு பகிரங்க சவாலாகவும் அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். குறித்த மூன்று மணி நேர கருத்தாடல் காணொளி இப்போதும் பொதுவெளியில் அனைவரது கவனத்துக்குமாக இருக்கிறது.

காணொளி இணைப்பு:

https://www.youtube.com/live/CQlBzjK2M6I?feature=share

ஊடகம் நடத்துகிறோம் என்ற போர்வையில், தமிழ்த்தேசிய அரசியலுக்கான பாதையில், மக்கள் மயப்படுத்தப்பட்ட உரிமைப்போராட்டங்களில் மக்கள் கலந்துகொள்வதை எப்படியாவது தடுத்து, மக்கள் ஒருமுகப்படுவதை தடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டோடு களமிறங்கியிருக்கிற தரப்புக்களோடு, இவ்வகையான ஊடகங்களும் கைகோர்த்துள்ளனவா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை; ஏனெனில், தொடர்ச்சியாக IBC குழுமம் இதே சேறடிக்கும் வேலையையே தொடர முயற்சிக்கிறது. இந்த சேறடிப்பின் சமீபத்திய ஆதாரமான காணொளியை இங்கு இணைக்கிறோம்.

இந்த சேறடிப்புக்காக, IBC குழுமம் தற்போது துணைக்கழைத்திருப்பது, முன்னாள் போராளி என தன்னை அழைத்துக்கொள்ளும் “கதிர்” என்பவரைத்தான்; இந்நபர், “சனநாயக போராளிகள் கட்சி” என தம்மை அடையாளப்படுத்தும் குழுவொன்றின் பொதுச்செயலாளர் என்றும் சொல்லப்படுகிறது. தமிழ்த்தேசியத்தை கைவிட்டுவிட்டு, பிராந்திய வல்லரசினதும், இலங்கை இனவாத அரசினதும் ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் பயணிக்கும் கதிர் போன்றவர்களை, மேற்படி IBC குழுமம் துணைக்கழைப்பதிலிருந்து, இவர்கள் அனைவரும் எந்த வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு, தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தை செவ்வனே செய்கிறார்கள் என்பதை கீழ்க்காணும் காணொளி அனைவருக்கும் மிகத்துல்லியமாக புரியவைக்கும்.

தான் ஒரு முன்னாள் போராளி என தன்னை அடையாளப்படுத்த முனையும் கதிர் என்ற நபர், உண்மையிலேயே தமிழீழ தேசிய விடுதலை போராட்டத்துக்கு பங்களித்திருந்தவராக இருந்திருப்பராகில், போராட்டத்தின் அடிப்படை அரசியலையும், கோட்பாட்டையும் நன்கு புரிந்துகொண்டவராக இருந்திருப்பார். 1987 இல் தேசியத்தலைமையும், ஒட்டு மொத்த தமிழ்மக்களும் முற்றுமுழுதாக நிராகரித்த, ஒற்றையாட்சியை வலியுறுத்தும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நோக்கி நகரும் தரப்புக்களால் உள்வாங்கப்பட்ட கதிர் என்ற நபர், தமிழீழ தேசியவிடுதலை போராட்டத்தின் அடிப்படை கருத்தியலிலிருந்தும், கோட்பாட்டிலிருந்தும் விலகிவிட்டவராகவே கருதப்பட வேண்டியவர். முப்படைகளையும் அமைத்து, உரிமைப்போராட்டத்தை 30 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுத்த ஒரு தேசிய விடுதலை இயக்கத்தின் அடைப்படை கொள்கையிலிருந்தும், கோட்பாட்டிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்ட ஒருவர், அவ்வியக்கத்தை பற்றி பேசும் தகைமையை இழந்துள்ளதோடு, தேசியத்தலைமை பற்றியோ, மாவீரர்கள் பற்றியோ, தேசிய விடுதலைப்போராட்டம் பற்றியோ பேசுவதற்கு அவ்வித அதிகாரமுமில்லாதவராகவும் ஆகிவிடுகிறார். தமிழ்மக்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் / 13 ஆவது திருத்தம் தொடர்பில் தேசியத்தலைமை கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறான கருத்துக்களை தெரிவிக்கும் கதிர் என்ற நபரின் புலம்பல்களை கீழ்க்காணும் காணொளி தெளிவாக விளக்குகிறது.

தனக்கான அரசியல் பாதையை வகுத்துக்கொள்ள யாருக்கும் சகல உரிமைகளும் உண்டு. அதே உரிமைதான் கதிர் என்ற நபருக்கும் உண்டு. எனினும், தேசியவிடுதலை போராட்டத்தின் அடைப்படை கொள்கையையும், கோட்பாட்டையும் விட்டு விலகியதன் பின், தற்போது தான் தேர்ந்தெடுத்த கொள்கை பற்றி பேசுவதை விடுத்து, தமிழ்த்தேசிய கொள்கையை கைவிட்டுவிட்டு, வேறொரு அரசியலுக்குள் உள்வாங்கப்பட்ட பின்னரும், தேசியவிடுதலை போராட்டத்தையும், மாவீரர்களையும், தேசியத்தலைமையும் துணைக்கு வைத்துக்கொண்டு, “முன்னாள் போராளி”  என்ற போர்வையையும் போர்த்துக்கொண்டு, தமிழ்த்தேசியத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு பங்கம் ஏற்படுத்தவும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை குழிதோண்டி புதைக்கும் ஒற்றையாட்சி / 13 ஆவது திருத்தம் என்று தீய தரப்புக்களையோடு கைகோர்த்து பயணிக்கும் கதிர் போன்ற நபர்களை, தமிழ்த்தேசிய கொள்கையின்பால் பற்றுக்கொண்ட யாரும் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்த கதிர் என்ற நபரை வைத்து, திரு. நடராஜர் காண்டீபனையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் அவதூறு செய்யவென்றே ஒரு விளம்பரத்தை தயார் செய்து உலவ விட்டிருக்கிறது, IBC தமிழ் இணையம். ஆதாரமில்லாத குற்றச்சாட்டொன்றை மக்களிடையே விதைப்பதற்கு, முன்னாள் போராளி என்று தன்னை முன்னிலைப்படுத்த முனையும் கதிர் என்ற என்ற நபரை வைத்து, இந்த அவதூறை பரப்ப முனையும் மேற்படி இணையத்தின் சூழ்ச்சி கவனிக்கத்தக்கது. எனினும், தமிழீழ தேசியவிடுதலை போராட்டத்தின் அடிப்படைக்கொள்கை மற்றும் கோட்பாட்டை கைவிட்டு, அவற்றுக்கு நேரெதிரான வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்ட ஒருவரை முன்னாள் போராளி என முன்னிலைப்படுத்தி, எமது தேசத்தின் விடுதலைக்காக போராடிய மறவர்களின் “முன்னாள் போராளிகள்” என்ற விழிப்புக்கு எம்மக்கள் மனதில் இருக்கும் அதியுயர்ந்த இடத்தை தவறாக பயன்படுத்த முனையும், மேற்படி இணையத்தின் சூழ்ச்சியை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேற்படி இணையத்தின் அவதூறு விளம்பரத்தில் பேசியிருக்கும் கதிர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிப்படை ஆதரமில்லாதவையாக இருக்கும் நிலையிலும், மேற்படி இணையத்தின் சூழ்ச்சியை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும் நிலையிலும் இப்பதிவு அவசியமாகிறது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் தான் தேசிய விடுதலைப்போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டது என்ற பாரதூரமான அவதூறை அள்ளி வீசியிருக்கிறார், கதிர். தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலப்பகுதியில், தேசியத்தலைமைக்கும், திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குமான அரசியல் புரிதல் அனைவருமறிந்தது. பின்னாளில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கபட்டபோது, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அவசியம் தேசியத்தலைமையால் உணரப்பட்டதன் விளைவே, அவர் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டமை. தவிரவும், 2009 இனவழிப்பின் இறுதிக்கணங்களில், யார் யார் எவ்வாறெல்லாம் செயற்பட்டு, எம்மக்களை காத்திருக்க வேண்டுமோ, அதை செய்யாமல், எவ்வாறெல்லாம் வரலாற்று தவறிழைத்தார்கள் என்பதையெல்லாம் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்கள் முன்பும், சர்வதேசத்தின் முன்பும் பதிவு செய்திருப்பதெல்லாம் வரலாறாக இருக்கிறது. இவற்றையெல்லாம் கதிர் போன்ற நபர்கள் தேடிப்படிப்பதும், அறிந்து கொள்வதும் அவர்களது எதிர்காலத்துக்கு உதவக்கூடும். போகிற போக்கில், வாய்க்கு வந்தபடி சொல்வதை விட்டுவிட்டு, தனது குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக சொல்வதுதான் கதிர் என்ற நபர் நியாயமாக செய்யவேண்டியது; அதை விடுத்து, எல்லாவற்றையும் நேரில் இருந்து பார்த்தது போல் கதையளக்கும் பத்தோடு பதினொன்றாக தன்னையும் சேர்த்துக்கொண்டு, தன்னைத்தானே தரம் தாழ்த்திக்கொள்வதை அவதானிக்கும்போது, எந்த வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு அவர் இந்த அவதூறை முவைக்க பணிக்கப்பட்டிருக்கிறார் என்பது நன்கு புரியும்.

திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சதி செய்தார் என்றும் குறிப்பிடுகிறார், கதிர். சதி என்பதற்கு என்ன அர்த்தமென்பதை கதிர் மிகச்சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு, அவரது இன்றைய நிலையே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க முடியும். அதாவது, தமிழீழ தேசியவிடுதலை போராட்டத்தில் பங்களித்ததாக சொல்லிக்கொள்ளும் கதிர், அந்த போராட்டத்தின் அடிப்படைக்கு முற்றிலும் முரணான நிலையை தற்போது எடுத்திருப்பதோடு, தமிழீழ தேசிய விடுதலை போராட்டத்தை நசுக்கி, இனவழிப்புக்கு துணைபோன தரப்புக்களை தனது எசமானர்களாக வரித்துக்கொண்டிருப்பதே “சதி” என்பதற்கான மிகச்சரியாக எடுத்துக்காட்டாக இருக்கக்கூடியது. ஆக, கதிர் என்ற நபர் இன்று தமிழீழ தேசியவிடுதலை போராட்டத்துக்கு செய்யும் சதி இதுவென நிறுவ முடியும்.

அவதூறே பணியாக…! IBC தமிழ் குழுமம்…!! 1 அவதூறே பணியாக…! IBC தமிழ் குழுமம்…!! 2 அவதூறே பணியாக…! IBC தமிழ் குழுமம்…!! 3

2009 இறுதிக்கணங்களில் யாரிடமும் எந்தப்பொறுப்பையும் இயக்கம் ஒப்படைக்கவில்லை என குறிப்பிடும் கதிர், மாறாக, தேசியத்தலைவர் அவர்கள் இறுதிக்கணங்களில் தங்களிடம் சில வேலைத்திட்டங்களை ஒப்படைத்தார் என்று சந்தடி சாக்கில் நகைச்சுவை சேர்க்கவும் மறக்கவில்லை. இப்படி வாக்கு மூலம் கொடுப்பதால், இறுதிக்கணங்களில் தலைவர் அவர்களோடு தான் நேரடி தொடர்பில்  இருந்ததாக சித்தரிக்க முயல்வதோடு, இதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை கட்டியெழுப்ப முயலுவதையும் பரிதாபத்தோடுதான் பார்க்கவேண்டியிருக்கிறது. இவரது கதைகளுக்கு காதுகளை கொடுப்போமாகில், ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தத்தை, இயக்கமும், ஒட்டு மொத்த தமிழ்மக்களும் அடியோடு  நிராகரித்தமையானது வரலாற்று தவறு, ஆகவே, அதனை ஏற்றுக்கொண்டு, அதனடிப்படையில் பயணியுங்கள் என்று தலைவர் அவர்கள் தங்களிடத்தில் பணித்தார் என்றும் சொல்ல முற்படுவார்; ஏனெனில், இன்று அவர் உள்வாங்கப்பட்டிருப்பது அதற்கான வேலைத்திட்டத்திற்குள் தான். 

2009 இல் தமிழீழ தேசியவிடுதலை போராட்டம் முடக்கப்பட்டவுடனேயே திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து வெளியே வந்துவிட்டார் என கதிர் குறிப்பிடும்போது கதிர் மேல் அனுதாபம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. விடயங்கள் தெரியவில்லையெனில், வரலாறுகளை படித்து குறிப்பெடுத்து வைத்துக்கொண்டாவது பேசவேண்டும் என்பதை கதிருக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு அறிவுறுத்தினால், எதிர்காலங்களில் அவர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவமானப்படும் நிலைமைகளை தவிர்க்கலாம். ஆயுதப்போராட்டம் முடக்கப்பட்ட சில தினங்களிலேயே இலங்கை வந்த இந்தியத்தரப்போடு நிகழ்ந்த சந்திப்பையடுத்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தனது பாதையை மாற்றிக்கொள்கிறது. அதாவது, கூட்டமைப்பை உருவாக்கும்போது, எந்த நோக்கத்திற்காகவும், கொள்கைக்காகவும் அது ஆரம்பிக்கப்பட்டதோ, அதிலிருந்து வழுவி, இந்திய / இலங்கை அரசுகளின்  அபிலாசைகளுக்காக தனது பயணத்தை மாற்றிக்கொள்ள முடிவெடுக்கிறது. தமிழ்த்தேசிய பாதையில் பயணிக்க வேண்டிய கூட்டமைப்பு, பாதை மாறியதாலும், இந்திய / இலங்கை அரசுகளின் அறிவுறுத்தல்களை தொடர்வதற்காக திரு. சுமந்திரனை கூட்டமைப்புக்குள் உள்வாங்கவேண்டிய கட்டாயம் இருந்ததாலும், திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார் என்ற உண்மையை, திரிபுபடுத்தி கதிர் சொல்வதானது, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த்தேசிய அரசியலில் பெற்றிருக்கும் காத்திரமான இடம், கதிர் போன்றவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள தரப்புக்களின் கண்களை உறுத்துகிறது என்பதையே உணர்த்துகிறது.

திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பொறுத்தவரை, அவருக்கும் தேசியத்தலைவருக்குமான புரிதல்களின் உச்ச வெளிப்பாடாகவே அவர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் தலைவரால் உள்வாங்கப்பட்டார். இன்று அவர் தனியான தமிழ்த்தேசிய அரசியல் இயக்கம் காணும் நிலைக்கு தள்ளப்பட்டாலும், தமிழ்த்தேசிய கொள்கையிலும், உறுதியிலும் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களையும் கொண்டிராத அரசியல் நகர்வை அவர் இன்றுவரை முன்னகர்த்தி வருவதால் தான், கதிர் போன்ற பாதை மாறியவர்களை துணைக்கழைத்து, IBC குழுமம் அவர்மீதும், அவரது கட்சி சார்ந்தவர்கள் மீதும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கம் மீதும் அவதூறுகளை அள்ளிவீச அரும்பாடுபடுகின்றன.  

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்றும் தான் சொல்வதாக கூறுகிறார் கதிர். இப்படி சொவதற்கான அதிகாரத்தை கதிர் என்ற நபருக்கு யார் கொடுத்தார்கள்…? ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும், அப்படி சொல்வதற்கான முழு உரிமையும், எப்போதும் போராளியாக இருப்பவர்களுக்கே இருக்கிறது. ஒரு போராளி, எப்போது போராளியாக இருந்தாரென்பது முக்கியமல்ல; எப்போதுமே போராளியாக இருக்கிறாரா என்பதே முக்கியம். “தேசத்தின் குரல்” பாலா அண்ணர் ஒரு முறை தலைவர் அவர்களை பார்த்து, எனக்கு ஓய்வு கொடுங்கள் என்று கேட்டாராம். அதற்கு தலைவர் அவர்கள், “போராளிக்கு சாவில் தான் ஓய்வு” என சிரித்தபடியே பதிலளித்தாராம். இந்த தார்ப்பரியமெல்லாம், தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக்கொள்கையை கைவிட்டுவிட்ட கதிர் போன்றவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை. தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தை நேசிக்கும் யாவருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புத்தான் ஆத்மாவாக இருக்க முடியும் என்ற பொதுவான நிதர்சனத்தை கதிர் என்ற நபர் புரிந்துகொள்ள வேண்டும். தலைவர் அவர்களும், எம் தளபதிகளும், மாவீரர்களும், போராளிகளும், மக்களும் கட்டிவளர்த்த தமிழ்த்தேசிய கொள்கையை விற்றுப்பிழைக்க முயலும் யாரென்றாலும், கால ஓட்டத்தில் அவர்கள் மக்களால் தூக்கி வீசப்படுவது தவிர்க்க முடியாதது.

புலிகளின் வரலாறு கனதியானது, புலிகள் நெருப்பாற்றில் நீந்திக்கடந்தவர்கள் என்றெல்லாம் வார்த்தைகளில் சொல்லும் கதிர், அதே கனதியான வரலாற்றை கொண்ட, நெருப்பாற்றில் நீந்திக்கடந்த புலிகளையும், மாவீரர்களையும், தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது போல், போராட்டத்தை நசுக்கி, இனவழிப்புக்கு துணை நின்ற தரப்புக்களோடு கூடி கும்மியடிப்பதை எவ்வாறு புரிந்து கொள்வது…? இதற்கெல்லாம் பதில் சொல்ல முன்வருவாரா கதிர்…??

போராளிகளதும், மாவீரர்களதும் பெயர்களை பயன்படுத்தி புலம்பெயர் நாடுகளில் கோடிக்கணக்கில் பணம்பெற்று அதை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மோசடி செய்தது என்றும் சொல்கிறார் கதிர். இப்படி சொல்லுங்கள் என்று அவர் பணிக்கப்பட்டதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஆதாரமில்லாத இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை அவிழ்த்து விடுவது, பொறுப்பற்ற தன்மை என்பதையும், மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதாகவும் இருக்குமென்பதையும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கும் கதிர் போன்றவர்களால் மக்களுக்கும், இந்த சமூகத்துக்கும் பயனாக ஏதும் செய்துவிடும் தகைமை இருக்கிறதா என்பதை ஒவ்வொருவரும் கேள்விக்குள்ளாக்கவேண்டும். 2009 முள்ளிவாய்க்காலோடு, தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற மாபெரும் குறியீடும் தனது ஆயுதங்களை மௌனித்து அமைதியாகியதன் பின், அக்குறியீடு பற்றியெல்லாம் கதையளக்க யாருக்கும் எவ்வித தார்மீக அடிப்படைகளும் கிடையாது. இந்த நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு என்றெல்லாம் தமக்குத்தாமே பட்டம் சூட்டிக்கொள்ளும் உரிமை, கதிர் போன்றவர்களுக்கெல்லாம் எங்கிருந்து கிடைத்தது…?

முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகளை நம்பியிருக்க தேவையில்லையென்றும், அவர்களின் எதிர்காலம் தொடர்பிலும், அவர்களை என்ன செய்வது என்பது தொடர்பிலும் திட்டங்கள் தன்னிடம் இருப்பதாக சொல்கிறார், கதிர். முன்னாள் போராளிகளுக்கு புலம்பெயர் தேசத்து மக்கள் தங்களால் ஆனவற்றை, தங்களுக்கமைந்த வழிகளூடாக தொடர்ச்சியாக செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வழிகள், தமிழ்த்தேசியத்தில் பற்றுக்கொண்ட அரசியலாளர்களாக இருந்தாலும் தவறேதுமில்லை. புலம்பெயர் தேசத்து மக்களின் ஆதரவும், உதவிக்கரங்களும் தலைவரவர்கள் வளர்த்தெடுத்த “உண்மையான” முன்னாள் போராளிகள் நன்கறிந்தவை. தமிழீழ தேசியவிடுதலை போராட்டத்தின் அடிப்படையையே கைவிட்டுவிட்டு, போராட்டத்தை நசுக்கவும், இனவழிப்புக்கு உறுதுணையாகவும் நின்ற தரப்புக்களோடு கைகோர்த்துள்ள கதிர்; தமிழ் அரசியல்வாதிகளிடம் முன்னாள் போராளிகள் கையேந்தக்கூடாது என்று வகுப்பெடுக்கும் கதிர், தான் உள்வாங்கப்பட்ட, தமிழினவழிப்புக்கு துணைபோன தரப்புக்களிடமே முன்னாள் போராளிகள் கையேந்த வேண்டுமென சொல்லவருகிறாரா…?

அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் தமிழினத்துக்கு துரோகம் இழைத்தரென்றும் அவதூறை வீசுகிறார், கதிர். அப்படி என்னதான் ஜீ.ஜீ. துரோகமிழைத்தர் என கதிர் என்ற நபரால் விளக்க முடியுமா…? ஜீ.ஜீ. காலத்து அரசியல் நிலைமைகள் பற்றிய அறிதலாவது கதிரிடம் இருக்கிறதா…?? வேண்டுமானால், ஜீ.ஜீ. பற்றி பொது விவாதமொன்றுக்கான தளம் அமைக்க நாம் தயார்; கதிர் அதில் கலந்துகொண்டு, ஜீ.ஜீ. தமிழ்மக்களுக்கு என்ன துரோகமிழைத்தரென வாதிட தயாரா…?? இதை கதிர் என்ற நபர், சவாலாகவே எடுத்துக்கொள்ளலாம். 

IBC குழுமத்தின் “உறவுப்பாலம்” நிகழ்ச்சியை தான் வரவேற்பதாக, கதிர் சான்றிதழ் கொடுக்கும்போதே, இந்த விளம்பர நிகழ்ச்சியின் உட்கருத்து புரிந்தபோது சிரிக்காமலும் இருக்க முடியவில்லை. தமிழ்த்தேசியத்தின் வழி பற்றுதியோடு பயணிப்பவர்களை கிழித்து தொங்க விடுகிறோம் என, எசமானர்களை குளிர்விக்க புறப்பட்டு, இறுதியில் விறைத்து நிற்கும் இகழ் நிலை வரக்கூடாதென்பதை நினைவிருத்த வேண்டியது அவசியம். 

தமிழ் காங்கிரஸ் / தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பற்றிய அனைத்து தகவல்களையும் வைத்திருக்கிறோம், காலம் வரும்போது மக்கள் முன்னால் அவற்றை வெளிப்படுத்தி, அவர்களின் அரசியலை அம்பலப்படுத்திடுவோம் எனவும் கூறினார், கதிர். இருக்கும் ஆதாரங்களை சேர்த்து அடை காக்கிறீர்களா என்ன…? இருப்பதாக சொல்லும் ஆதாரங்களை முன்வைத்து மக்கள் முன்னால் விடயங்களை தெளிவு படுத்த வேண்டியதுதானே; அதென்ன நல்ல நேரத்துக்காக காத்திருப்பது…?? 

தியாகதீபத்தின் மரணத்துக்கு இந்தியா காரணமில்லை என்று, அந்த நாட்டில் நின்று திருவாய் மலர்ந்தருளிய போதே, கதிர் போன்றவர்களும் அவர் பயணிக்கும் குழுவும் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறை அறியாதவர்கள் என்பது நிதர்சனமாகிறது. தியாகதீபத்தின் உயிரீகையின் மகத்துவம், அகிம்சையின் தேசம் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அத்தேசம், தியாகதீபத்தின் உயிரீகத்தில் அம்மணமாகி நிற்பதெல்லாம் தெரியாதவர்களெல்லாம், முன்னாள் போராளிகள் என தம்மை அடையாளப்படுத்த முனைவது, தமிழீழ தேசத்தின் ஆன்மாவும் பொறுத்துக்கொள்ளாதது.

புலியை எதிர்ப்பவனுக்கும் புலித்தோல் தேவைப்படுகிறது… அதேபோல், தமிழ்த்தேசிய நீக்க அரசியலை செய்பவனுக்கும் தமிழ்த்தேசியம் என்ற  போர்வை தேவைப்படுகிறது. நிதர்சனம் இன்று இதுவானாலும், மாவீரர்களது உன்னத ஆன்மாக்கள் வழிநடத்தும்போது, எவ்விதமான இடையூறுகளையும் தகர்த்து, தனது பாதையில் கருவேல முட்களாக இடையூறு செய்யும் தமிழ்த்தேசிய விரோத நபர்கள், ஊடகங்கள் என அனைத்து தீய சக்திகளையும் உடைத்தெறிந்து தமிழ்த்தேசியம் பயணிக்கும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply