அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து டென்னிஸ் உலகின் முதல்தர வீரரான நோவக் ஜோகோவிச் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
கடந்த மாதம் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட ஜோகோவிச், கொவிட்- தடுப்பூசியில் பெறுவதில் இருந்து தனக்கு மருத்துவ விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பூர்வ சவாலில் நேற்று சனிக்கிழமை குறிப்பிட்டுள்ளார்.
நாளை திங்கட்கிழமை ஜோகோவிச் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அமைப்பாளர்களால் கொவிட் தடுப்பூசி நிலையில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக ஜோகோவிச் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,
அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய உள்துறை அமைச்சு வழங்கிய அனுமதிக் கடிதத்தையும் ஜோகோவிச் தனது மனுவில் இணைத்துள்ளார்.
அவரது மனு தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளிக்குமாறு அவுஸ்திரேலிய உள்த்துறை அமைச்சுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் தனது 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் நம்பிக்கையுடன் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச் உள்ளார்.
தற்போது மூன்றாவது நாளாக மெல்போர்னில் குடியேற்ற காவலில் அவா் வைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை விளையாட்டு ரசிகர்களிடையேயும் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியிலும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசி கட்டாய உத்தரவுகளை கடுமையாக எதிர்ப்பவரான ஜோகோவிச், தடுப்பூசி போடாததைக் காரணமாகக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, சாதாரண ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் செயல் செர்பியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையே பதட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உலகெங்கிலும் கட்டாய தடுப்பூசி ஆணைகளை எதிர்த்துப் போராடிவருவோரின் போராட்டங்களை இது மேலும் வலுவாக்கியுள்ளது.
2021 டிசம்பரில் நான் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டேன். இதன் அடிப்படையில் அவுஸ்திரேலிய அரசின் விதிகள் மற்றும் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி போடுவதில் இருந்து மருத்துவ விலக்கு பெற எனக்கு உரிமை உண்டு என ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்குள் சட்டபூர்வமாக நுழைவதற்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளேன் எனவும் அவா் கூறினார்.
இதேவேளை, தனது நாட்டின் பிரபல நட்சத்திர வீரருக்கு அவுஸ்திரேலியா விசா மறுத்துள்ளமையை செர்பியா கண்டித்துள்ளது. இது பழிவாங்கல் நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக், முழு செர்பியாவும் அவரை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.
இதற்கிடையே ஜோகோவிச்சுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளமை குறித்துக் கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன், அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை அனைவருக்கும் ஒரே விதியே நடைமுறையில் உள்ளது. யாரும் விதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.