மட்டக்களப்பில் தமிழ் மக்களின் எல்லைக் கிராமங்களான மயிலந்தமடு மற்றும் மாதவனையில் அமைந்துள்ள தமிழ்ப் பண்ணையாளர்களின் கால் நடைகளின் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் மேச்சல் தறைகளை ஆக்கிரமித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவியும் மேச்சல் தறைகளை அழித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிங்களவர்களை அங்கிருந்து வெளியேற்றி
தமது கால்நடை மேச்சல்த் தறைகளை மீட்டுத் தருமாறு கோரி தமிழ்ப் பண்ணையாளர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று – (17.10.2023) செவ்வாய்க்கிழமை -33,வது நாளாகவும் எதுவித தீர்வுகளுமின்றித் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்
நேற்று – (16.10.2023) திங்கட்கிழமை மயிலந்த மடுவில் தமிழர்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமித்து அங்கு திபுல பொத்தானை என்ற பெயர் சூட்டப்பட்ட இடத்தில் சட்டவிரோதமாக மயிலந்த மடுவை ஆக்கிரமித்துள்ள சிங்களவர்களால் புத்தர் சிலை ஒன்று நிறுவப் பட்டுள்ளது.
இந்தச் சட்டவிரோத நிகழ்வானது முன்நாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா-யஹம்பத்தின் வழிநடத்தலில் மட்டக்களப்பில் இனவாதியான சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையில் மயிலந்தமடுவை ஆக்கிரமித்து குடியேறியுள்ள சிங்களவர்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.
இதேநேரம் தமிழ்க் கால் நடை பண்ணையாளர்களுக்கும் சட்டவிரோத சிங்கள குடியேற்ற வாசிகளுக்கும் சிறந்த தீர்வை வழங்குவதாக சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருத்த நிலையில் தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கும் அவர்களது கோரிக்கைக்கும் எதிர்மாறாக ஆக்கிரமிப்பின் உச்சமாக திடீர் சட்டவிரோத புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளமை தமிழ்ப் பண்ணையாளர்கள் உட்பட தமிழ் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை நேற்றைய நாளில் தமிழ்ப் பண்ணையாளரின் பசு மாடு ஒன்று மயிலந்தமடுவில் சிங்களவர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளது.
அதேவேளை கடந்த இரண்டு நாட்களின் முன்பு பண்ணையாளர்களின் கால் நடைகளை காவல் செய்வதற்கென அமைக்கப்பட்ட கொட்டகை சிங்களவர்களால் தீ மூட்டி எரிக்கப் பட்டு அங்கு வைக்கப் பட்டிருந்த பால் கறக்கும் உபகரணங்கள் சிங்களவர்களால் களவாடிக்கொண்டு செல்லப்பட்டிருந்தது.