ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த அழுத்தம் வழங்குங்கள் !

You are currently viewing ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த அழுத்தம் வழங்குங்கள் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பெருமளவுக்கு வலுவற்றதெனினும், இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டும் செயன்முறை வரவேற்கத்தக்கதாகும். ஆனால் அச்செயற்திட்டத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணை மேலும் வலுப்படுத்தப்படவேண்டும்.

அதற்குரிய அழுத்தங்களை இணையனுசரணை நாடுகளில் ஒன்றான கனடா வழங்கவேண்டும் என இலங்கைக்கான அந்நாட்டு உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை(14) இரவு 7.30 மணிக்கு யாழ் ஃபொக்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது தமிழர்கள் முகங்கொடுத்துவரும் சமகாலப் பிரச்சினைகள், அப்பிரச்சினைகளுக்குரிய தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகர் கஜேந்திரகுமாரிடம் கேட்டறிந்தார்.

அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாம் புதியதொரு அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்பப்போவதாக ஏற்கனவே கூறியிருந்தாலும், தற்போதுவரை எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும், கடந்த காலத்தை ஒத்த நிலைவரமே இப்போதும் தொடர்வதாகவும் விசனத்துடன் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல், அரசியல் கைதிகளை விடுவித்தல் என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் முன்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் உரியவாறு நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்த கஜேந்திரகுமார், இவற்றை நாம் கூறுவதற்கு முன்னரே நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இருப்பினும் கூட, அரசாங்கம் வேண்டுமென்றே அவற்றைத் தவிர்த்துவருவதாகவே கருதவேண்டியிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

மேலும் தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வாக தாம் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வையே வலியுறுத்திவருவதாக கனேடிய உயர்ஸ்தானிகரிடம் கூறிய அவர், தற்போது பாராளுமன்றத்தில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 19 உறுப்பினர்களில் தமிழ்த்தேசியக்கட்சிகளைச்சேர்ந்த 10 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனை இலக்காகக்கொண்ட ஒற்றுமை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் எடுத்துரைத்தார்.

அத்தோடு கனடாவில் நடைமுறையில் இருக்கும் சமஷ்டி முறைமை தொடர்பில் இலங்கை மக்களுக்குத் தெளிவூட்டுவதற்குரிய செயற்திட்டத்தை கனடா முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பெருமளவுக்கு வலுவற்றதெனினும், இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை திரட்டும் செயன்முறை வரவேற்கத்தக்கதாகும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இருப்பினும் அச்செயற்திட்டத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணை மேலும் வலுப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திய அவர், அதற்குரிய அழுத்தங்களை இணையனுசரணை நாடுகளில் ஒன்றான கனடா வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply