இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக் கசிவினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது.
இந்த ஆலையில் இருந்து இன்று அதிக அழுத்தத்துடன் வெளியேறிய ரசாயன வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது.

இந்த நிலையில் காற்றில் கலந்த ரசாயன வாயுவால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவித்தனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தனர்.

ரசாயன வாயுவை சுவாசித்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனினும் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை உள்ளிட்ட 11 பேர் மரணம் அடைந்ததுடன் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விசாகப்பட்டினத்தில் நடந்த துயர சம்பவத்தில் பலியானவர்களுக்கு நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்

