இரண்டு வாரத்திற்கு முன்னர் இத்தாலி அருகே 73 புலம்பெயர்வோர் கடலில் மூழ்கி பலியான நிலையில், தற்போது புதிதாக 1,000 பேர்கள் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலி அருகே பல்வேறு சிறு படகுகளில் தத்தளிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்களை மீட்க கடலோர காவல்படை துரித நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.
தெற்கு கலாப்ரியா பிராந்தியத்தின் தலைவர் ராபர்டோ ஓச்சியுடோ தெரிவிக்கையில், மொத்தம் 1,300 புலம்பெயர்ந்தோர் சிறுபடகுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடலோர காவல்படையினரின் படகுகள் சுமார் 500 புலம்பெயர்வோரை மீட்க முயன்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 26ம் திகதி 73 புலம்பெயர்வோர் பலியான அதே பகுதிக்கு அருகாமையிலேயே இந்த படகுகளும் காணப்படுவதாக ராபர்டோ ஓச்சியுடோ தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு 800 புலம்பெயர் மக்களை மீட்கும் பொருட்டு, படகுகளை அனுப்பி வைத்துள்ளதாகவும், இத்தானிய கடற்படை கப்பலும் தற்போது உதவிக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களாக புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுவதாகவும், ஆனால் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் சிக்கல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.