ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலியாகினர்.
துர்க்மெனிஸ்தான் எல்லையை ஒட்டிய பட்கிஸ் மாகாணத்தில் நேற்று உள்நாட்டு நேரப்படி மதியம் இரண்டு மணிக்கும் தொடர்ந்து இரண்டு மணி நேரங்கள் கழித்து 4 மணியளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
முதல் நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவிலும் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இரண்டாவது நிலநடுக்கம் 4.9 ரிக்டர் அளவிலும் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பட்கிஸ் மாகாண தலைநகரான கலா-இ நாவில் இருந்து கிழக்கே 41 கிலோமீட்டர் தொலைவிலும், தென்கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த நிலநடுக்கங்களின் மையப் பகுதிகள் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டை தலிபான் கையகப்படுத்தியதன் பின்னர் அந்நாடு பெரும் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஆப்கானுக்கான சர்வதேச உதவிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் உள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 26 பேர் பலியானதை ஆப்கான் அவசரகால விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் அவசர கால செயல்பாட்டு மையத்தின் தலைவர் முல்லா ஜனன் சாகே உறுதிப்படுத்தினார். அத்துடன், 700 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அவர் கூறினார்.