ஆப்கானிஸ்தானில் பல நகரங்களைக் கைப்பற்றி, தலிபான்கள் வேகமாக முன்னேறும் நிலையில் அங்கு பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாக காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
அத்துடன், ஆப்கானில் உள்ள அனைத்து அமெரிக்கர்களையும் கூடிய விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறும் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
20 வருடங்களாக தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள், ஆப்கான் அரசுக்கு அளித்துவந்த இராணுவ ஆதரவைக் கைவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டன. இந்நிலையில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலிபான்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.
அங்கு நிலைமை மோசமாகி வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் அரச படைகளுக்கு அமெரிக்க இராணுவம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமாக பென்டகன் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை சரியான திசை நோக்கிச் செல்லவில்லை என பென்டகன் ஊடகச் செயலாளர் ஜோன் கிர்பி நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
விமானத் தாக்குதல் உட்பட நாங்கள் சாத்தியமான வழிகளில் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம் எனவும் அவா் குறிப்பிட்டார்.
தலிபான்களுடன் போரிடும் திறன் ஆப்கானியப் படைகளுக்கு உண்டு. அவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு ஆப்கானிஸ்தான் அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகளுக்கு உண்டு எனவும் ஜோன் கிர்பி தெரிவித்தார்.
அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 31 உடன் தனது செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தி, அங்கிருந்து வெளியேறும் என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 31-க்குப் பின்னரும் ஆப்கான் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவம் தொடர்ந்து விமான தாக்குதல்கள் மூலம் ஆதரவை வழங்குமா? என்று கேட்டபோது, அதற்கு பதிலளிக்க பென்டகன் ஊடகச் செயலாளர் ஜோன் கிர்பி மறுத்துவிட்டார்.
இதேவேளை, அண்மைக் காலங்களில் மட்டும் தலிபான்கள் 6 மாகாண தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் கடும் சண்டைகளுக்கு மத்தியில் தலிபான்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர். நாட்டின் 34 மாகாணங்களில் தற்போது கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.