தீவிரமாக உலகமெல்லாம் பரவிவரும் கொரோனா தொற்றால் ஆப்பிரிக்காவில் 10 மில்லியன் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் ஆணையம் அறிவித்துள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,467,524 ஆக அதிகரித்துள்ளது. 169,398 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் உள்ள 54 நாடுகளில் இதுவரை 20,000 பேருக்கும் குறைவாக தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்பிரிக்காவில் அடுத்த 3-6 மாதங்களுக்குள் சுமார் 10 மில்லியன் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் கோவிட்- 19 நோயால் ஆப்பிரிக்காவில் 3,00,000 பேர் உயிரிழக்கக்கூடும் என ஆப்பிரிக்காவிற்கான ஐ.நா பொருளாதார ஆணையம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2.9 கோடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையான பொருளாதார இழப்பைச் சந்திப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
இதில் இருந்து மக்களை பாதுகாக்கவும், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் சுமார் 100 பில்லியன் டாலர் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா பல்வேறு நாடுகளுக்கு தீவிரமாக பரவ ஆரம்பித்த உடனே ஆப்பிரிக்காவில் சமூக விலகல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆப்பிரிக்காவில் 1,000 பேருக்கு 1.8 என்ற அளவில் தான் மருத்துவ படுக்கைகள் வசதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ பரிசோதனை, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளுக்கு 44 பில்லியன் டாலர் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா 94% மருந்துகளை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் தற்போது பல்வேறு நாடுகள் மருந்து பொருட்களை குறைந்த அளவில் தான் ஏற்றுமதி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பால் ஆபிரிக்காவில் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.