உலகப்புகழ் பெற்ற “ஆப்பிள்” நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சாதனங்களை ஊடறுப்பு (ஹேக்) செய்வது கடினம் என்பதால், உலகளாவிய ரீதியில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகள் புகழ்பெற்று விளங்குகின்றன.
விலையில் உச்சத்தில் இருந்தாலும், இலகுவில் ஊடறுப்பு செய்து தகவல்களை திருட முடியாது என்பதால், ஆப்பிள் நிறுவன தயாரிப்பான “ஐ ஃபோன்” கைத்தொலைபேசிகளை மக்கள், குறிப்பாக வர்த்தக உலகத்தினர் விரும்பி பாவித்து வருகின்றனர்.
எனினும், பயங்கரவாத செயல்கள் உட்பட சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் தொடர்புகளை கண்காணிப்பதற்காக, அவர்கள் பயன்படுத்தும் ஐ ஃபோன்களை ஊடறுத்து பார்க்கும் வழிவகைகளை ஆப்பிள் நிறுவனம் செய்துதரவேண்டுமென அமெரிக்க உளவுத்துறையான “FBI” ஆப்பிள் நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்து வந்திருந்தது.
எனினும், தமது உற்பத்திகளை ஊடறுப்பு செய்ய முடியாது என்ற மக்களின் நம்பிக்கையே தனது மூலதனம் என்பதை நன்கு புரிந்திருக்கும் ஆப்பிள் நிறுவனம், “FBI” இன் வேண்டுகோளை நிராகரித்து வந்தது.
இந்த நிலையில் பொறுமையிழந்த “FBI” உளவுத்துறை, ஆப்பிள் நிறுவனத்தின் “ஐ ஃபோன்“ கைத்தொலைபேசிகளை ஊடறுக்கும் முயற்சிக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. இதன் மூலம், உலகெங்கிலும் பாவனையிலுள்ள சுமார் 90 மில்லியன் ஐ ஃபோன் கைத்தொலைபேசிகளை ஊடறுத்து தகவல்களை பெறும் வல்லமையை “FBI” பெற்றுள்ளது.
எனினும் இதை பலமாக எதிர்க்கும் ஆப்பிள் நிறுவனம், தனது உற்பத்திப்பொருட்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு “FBI” பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு உறுதுணையாக இருந்தாலும், அமெரிக்க உளவுத்துறைக்கு ஆப்பிள் நிறுவனம் ஒத்தாசையாக இருப்பதில்லையென, அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக விசனம் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.