தமிழர் நிலத்தில் ஆமை வேகத்தில் அதிகாரத்தை அதிகரிக்கும் jvp

You are currently viewing தமிழர் நிலத்தில் ஆமை வேகத்தில் அதிகாரத்தை அதிகரிக்கும் jvp

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது அரசியல் நிலைப்பாடுகளில் மெய்யான மாற்றங்கள் சிலவற்றைக் கொண்டுவரவேண்டும். குறிப்பாக ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் ஏக்கிய ராச்சியவைக் கைவிடல், போர்க்குற்ற விசாரணை முடிந்துவிட்டது – இங்கு நடந்தது இனவழிப்பல்ல என்கிற கதைகளைக் கைவிடல், வடக்கு கிழக்கு இணைந்த மரபுவழி தமிழர் நிலத்தைத் தமிழர் தேசமாக உளப்பூர்வமாக ஏற்றல், இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் நிகழும் குடுமிப்பிடி சண்டைகளை முடிவுக்குக் கொண்டுவரல், அதற்காகத் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குக்களை மீளப்பெறல் எனப் பல மாற்றங்களை அவர் செய்யவேண்டியிருக்கிறது.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பிருந்தே மு.நா.உ. சுமந்திரன் தரப்பால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். புறமொதுக்கப்படுகிறார். இதன் உச்சத்தை அண்மையில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்திலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளைச் சந்திக்க சென்ற நேரத்தில் நா.உ. சிறீதரன் அவர்களுக்கு நடந்தவற்றையும் பார்த்திருப்போம். சொந்தக் கட்சிக்குள்ளே இவ்வளவு சதிகள் நடக்கும்போதும்கூட தனியொருவனாக நின்று கிளிநொச்சி மாவட்டத்தின் அத்தனை உள்ளூராட்சி சபைகளையும் தமிழரசுக் கட்சி வசப்படுத்தியிருக்கிறார் அவர். எனவே இங்கு தமிழரசுக் கட்சியின் மக்கள் செல்வாக்குள்ள பெருந்தலை நா.உ.சிறீதரன்தான். இந்தக் கள யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை அவரிடம் கையளிக்க வேண்டும்.

இப்படியெல்லாம் மு.நா.உ. சுமந்திரன் தரப்பில் உடனடியாக செய்யவேண்டிய பல மாற்றங்கள் உள்ளன. அதனையெல்லாம் விரைவாக செய்த பிறகு தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து வடக்கில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பது குறித்த முடிவிற்கு வருவதே பொருத்தமானது. என்றுமில்லாதவகையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கே தெற்கு கடசியோடு தமிழ் தேசியக் கட்சிகள் பொருத வேண்டியிருந்த சூழலில், தமிழ் தேசியக் கட்சிகளுக்கு வகை பிரித்து வாக்களித்து தமிழ் மக்கள் ஆழமான ஒரு செய்தியை புகட்டியுள்ளனர். விரைவாகத் தமிழ் தேசியக் கட்சிகள் ஒற்றுமையடையுங்கள் என்பதுதான் அந்தச் செய்தி. இந்தச் செய்தியை விளங்கிக்கொள்ளாமல், சபைகளின் ஆட்சியை பிடித்தால் மட்டும் போதும் என்ற நோக்கோடு உள்ளொரு நஞ்சும் வெளியொரு புன்னகையுமாக அரசியல் செய்ய நினைத்தால், இப்போது கிராம மட்டத்தில் கிளை பரப்பியிருக்கும் ஜேவிபி அடுத்து வரும் தேர்தல்களில் ஆணிவேர் விடும். ஜேவிபி வெற்றிகரமாக கையாளக்கூடிய பல பிரச்சினைகளைத் தற்போதைய தமிழ் தேசியம் தன் உட்கூறாக வைத்திருக்கிறது. அடுத்து அவர்கள் அதையெல்லாம் பிடித்தே அரசியல் செய்யப்போகிறார்கள்.

தமிழர்களாகிய நாங்கள் ஜேவிபியை வடக்கு கிழக்கில் தோற்கடித்துவிட்டோம் என்று அதிகப் புளகாங்கிதப்படுகின்றோம். கடந்த ஆறு மாத காலப்பகுதியில் அவர்கள் நம்மத்தியில் நிகழ்த்திய அலப்பறைகள்தான் அதற்குக் காரணம். ஆனால் சற்று நிதானமாகப் பார்த்தால் ஜேவிபி ஆமைவேகத்தில் தமிழ் சமூகமயப்பட்டிருக்கிறது. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 56615 வாக்குகள் ஜேவிபிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆழமான தமிழ் தேசியப் புரிதலோடு ஒன்றிணைந்த தமிழ் தேசிய பேரவை யாழ்ப்பாண மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட வாக்குகள் 51046. வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஜேவிபியின் கை ஓங்கியிருக்கிறது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் கிளிநொச்சி மாவட்டத்தைத் தவிர ஏனைய அனைத்து இடங்களிலும் ஜேவிபி கடைதிறந்திருக்கிறது.

ஆகவே இந்த நிலைமைகளில் இருக்கிற ஆபத்தை மு.நா.உ.சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினர் விளங்கிக்கொண்டு, விரைவாக நல்லதொரு முடிவுக்கு வரவேண்டும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply