ரஷ்யாவின் கடுமையான தாக்குதல்களுக்கு முகம் கொடுத்துள்ள உக்ரைன், ரஷ்ய இராணுவம் நிலைகொண்டுள்ள உக்ரைனிய பகுதிகளை மீட்டெடுப்பதற்காக நேட்டோ நாடுகள் கனரக ஆயுதங்களை தனக்கு வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தமை நினைவுகூரத்தக்கது. குறிப்பாக, ஜெர்மனிய தயாரிப்பான “Leopard – 2” வகையான கவச வாகனங்கள், ரஷ்யப்படைகளை எதிர்த்து போரிட இன்றியமையாதவை என கருதப்படுவதால், இவ்வகையான கவச வாகனங்களை உக்ரைன் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தது.
எனினும், உக்ரைனுக்கான கனரக ஆயுத உதவிகள் தொடர்பில் ஜெர்மனியில் கூடிய நேட்டோ நாடுகளுக்கிடையில் இது விடயம் தொடர்பில் இரட்டை நிலைப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கவச வாகனங்களை வழங்குவதற்கு பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா, நோர்வே, சுவீடன் உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ள நிலையிலும், ஜெர்மனியின் “Leopard – 2” உக்ரைனின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. எனினும், இன்றைய சந்திப்பில் தனது தயாரிப்பான “Leopard – 2” கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கு ஜெர்மனி உடன்படாததால் உக்ரைனிய அதிபர் கடும் கோபமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தனது பாவனைக்காக ஜெர்மனியிடமிருந்து போலந்து வாங்கிய “Leopard – 2” கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக போலந்து தெரிவித்திருப்பதானது, நேட்டோ கூட்டமைப்பில் கருத்துப்பிளவை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் தயாரிப்பை, தனது பாவனைக்காக வாங்கிய போலந்து, ஜெர்மனியின் ஒப்புதல் இல்லாமல் வேறு நாடொன்றுக்கு விற்பனை செய்யவோ அல்லது நன்கொடையாகவோ கொடுக்க முடியாது என்ற வரைமுறை நடைமுறையில் இருக்கும்போதும், போலந்து இவ்வாறு தெரிவித்திருப்பதால், போலாந்துக்கும், ஜெர்மனிக்குமிடையில் முரண்பாடுகள் உருவாகும் நிலை தோன்றியிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்கும் பட்சத்தில், அவற்றை கொண்டு உக்ரைன் தனது படைகள் நிலைகொண்டுள்ள பகுதிகளில் தாக்குதல்களை நடத்தினால், அது அணுவாயுதப்பவனைக்கு வழி வகுக்கும் என ரஷ்யா நேற்று அறிவித்திருக்கும் நிலையில், ரஷ்யாவின் இந்த அறிவிப்பை கவனத்தில் எடுத்துள்ள நேட்டோ நாடுகளில் சில, நிலைமையை நிதானமாகவே கையாள முனைந்துள்ளதாகவும், இதனால், உக்ரைனுக்கான ஆயுத கொடுப்பனவு விடயத்தில் மந்தநிலை ஏற்படக்கூடுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது.
இதேவேளை, ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருவதோடு, உயரமான கட்டடங்கள் மீது வான் பாதுகாப்பு ஆயுதங்களும், ஏவுகணைகளும் நிலைநிறுத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், காத்திரமான எதிர்த்தாக்குதலொன்றை எதிர்கொள்வதற்கு ரஷ்யா தன்னை தயார்ப்படுத்தி வரும் நிலையில், பெரும் நடவடிக்கையொன்றுக்கு ரஷ்யா தயாராவதை அனுமானிக்க முடிவதோடு, நேற்று ரஷ்யா தெரிவித்துள்ளதைப்போல், அணுவாயுதப்பவனையை ரஷ்யா கையிலெடுக்கக்கூடும் என்ற அச்சமும் தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.