பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். அவர் குறித்து தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை மீள்பதிவு..
தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
மே 21, 2008.
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,
விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.
பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.
தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.
பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
(வே.பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.