ஆழவேரோடிய ஆலமரமும்,அசைக்க நினைக்கும் துரோகப் புயல்களும் தமிழீழ விடுதலைப்போராட்டம் பல உச்சகட்டத் தியாகங்களைத் தன்னகத்தே கொண்டது. உன்னதமான மதிநுட்பமான வழிநடத்தலையும், தலைமைப் பண்பையும் கொண்டது. மாபெரும் தலைமையை தன்னுள்ளே இன்னும் அடக்கி வைத்திருக்கின்றது.
2009 மே 18 இல் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் , தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனையே தமிழினத்தை இன்றுவரை வழிநடாத்துகின்றது. மேதகு பிரபாகரன் சிந்தனை எத்தகைய வலிமை கொண்டது என்பதை உலகறியும். எதிரிகளால் நெருங்க முடியாது, துரோகிகளால் தப்ப முடியாது, போலிகளால் தாக்குப்பிடிக்க முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக போலிகளின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை .
நிதிவளம் கொண்ட தமிழ்த்தேசியப் பற்றாளர்கள், செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் போன்றோரைக் குறிவைத்து தேசியத்தலைவரின் குடும்ப உறவுகளைக் காண்பிப்பதாகக் கூறி ஒரு குழுவைக் கூட்டிச் சென்று கதையளந்தார்கள். அந்தக் கருத்துருவாக்கங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை, நின்று பிடிக்கவில்லை . செயற்பாட்டாளர்களை, போராளிகளை மூளைச்சலவை செய்தார்கள் சரிவரவில்லை. எனவே நிதியைக் கறக்கும் வரை கறந்துவிட்டு, கழட்டி விட்டார்கள்.
தற்போது புதிய நிதிவளங்களைத் தேடிக் கண்டறிந்து அவர்கள் குறிவைக்கப்பட்டு அதே சந்திப்புக் காட்சிகள் அரங்கேறியுள்ளன. மூளைகள் நன்றாக சலவை செய்யப்பட்டுள்ளன. இனிமேல் ஒத்திகைகள் மேடைகளில் அரங்கேறும். போராளிகளே, செயற்பாட்டாளர்களே, மக்களே அவதானம்.
இதன் பின்னணி என்ன? சற்று விரிவாகப் பார்ப்போம். நீண்ட காலமாகவே தென்னாசியாவின் பாதுகாப்பு அசைவியக்கம் தனது கையில் இருக்கவேண்டும் என இந்தியா நினைத்து வருகிறது.
அதற்கான புலனாய்வு வலைப்பின்னலையும் ஆழமாக விதைத்திருக்கின்றது. இந்த interligent network இலிருந்து தங்களைத்தாண்டி எதுவுமே நடக்காது என்ற மமதையில் இருந்தவர்களிற்கு சிம்மசொப்பனமாக இருந்தது, இருப்பது தமிழீழ விடுதலைப்புலிகள், இதனை வழிநடத்துவது, தேசியத்தலைவரின் சிந்தனை. தமிழீழம் என்ற கோட்பாட்டிற்கு முன்னால் எந்தக் கொம்பன் வந்தாலும் விட மாட்டேன் என்ற மேதகு பிரபாகரன் சிந்தனையே, இந்த ஆக்கிரமிப்பாளர்களை சினம் கொள்ள வைத்தது. விளைவு மிகப்பெரிய தமிழின அழிப்பை நடத்தி முடித்தார்கள்.
முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடிந்தது எனக் கனவு கண்டார்கள் .ஆனால் தேசியத்தலைவரின் சிந்தனை நின்று வழிகாட்டி தமிழீழ விடுதலைப்போரை தொடர்ந்து நடத்தும் என அவர்கள் துளிகூட நினைக்கவில்லை . இந்தோ-லங்காவினால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் பேரழிவிலும் அழியாத பிரபாகரன் சிந்தனையை, தற்போது அழித்து தமிழீழ விடுதலைப்போரின் வீரியத்தை சிதைக்கவே இந்தப் போலிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். எதிர்வருங்காலங்களில் , சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து புதிய கதைகளைக் காவிக்கொண்டு, அண்ணனைக் கண்டோம், ஆரத்தழுவினோம், தங்கச்சியைக்கண்டோம்,உணவுண்டோம் என உருட்டுக்களை அவிழ்த்து விட்டுக்கொண்டு, தேசியத்தலைவரின் சிந்தனையை சிதைத்து விடுதலைப்போரையும், தலைமையின் வீரப்பண்புகளையும் அழிக்க சில போலிகள் புறப்பட்டு வரலாம். விடுதலைப்புலிகளின் மரபு என ஒரு வரலாறு மேதகு பிரபாகரன் அவர்களினால் தமிழீழ மக்கள் மனங்களில் ஆழமாக பதியம் போடப்பட்டுள்ளது.
அந்த வீரவரலாற்றை, தேசியத்தலைவரின் பண்புகளைப் புறந்தள்ளி மேற்கொள்ளப்படும் எதிரிகளின் எத்தகைய சவால்களையும் சதிமுயற்சிகளையும் அனைவரும் இணைந்து முறியடிப்போம். எமது மக்களும் , செயற்பாட்டாளர்களும், போராளிகளும் தெளிவுடன் இருக்கும் வரை எவராலும் மேதகு பிரபாகரன் சிந்தனையை நெருங்க முடியாது. போலிகளிற்கு தகுந்த பாடம் புகட்டுவோம். விழிப்பே விடுதலையின் முதற்படி
-அனைத்துலக சிந்தனைப்பள்ளி-